ஜோதி நகர் மக்கள் அடிப்படை வசதி கோரி போராட்டம்
தூத்துக்குடி ஜோதி நகர் பகுதியில் ஆதி திராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் சாலை, தெரு விளக்கு, குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் உடனடியாக தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற கோரிக்கை;
தூத்துக்குடி ஜோதி நகர் பகுதியில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 174 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு தலா இரண்டு சென்ட் வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. அங்கு குடிசையில் வாழ்ந்து வந்த இக்குடும்பங்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால் இடம்பெயர்ந்து வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய இவர்கள், சாலை, குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் அரசு வீடுகள் அமைக்க வேண்டும் என பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர். மேலும் அந்த நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறார்கள் என்றும், தங்களுக்கான உரிய தீர்வு வழங்க மாவட்ட நிர்வாகம், ஆளுங்கட்சித் தலைவர்கள், அமைச்சர், எம்.பி., மேயர் ஆகியோர் கவனம் செலுத்தவில்லை என்றும் மக்கள் தெரிவித்தனர். உடனடியாக தலையிட்டு, இலவச வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.