நாகை மாவட்டம் நாகூர் அடுத்த வெங்கிடங்கால் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (51). பொதுப்பணித் துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் வெங்கடேஷ் (30). நேற்று முன்தினம் இரவு சேகருக்கும், வெங்கடேஷிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் தன் தந்தை என்றும் பாராமல் கட்டையை எடுத்து, தன் தந்தையின் தலையில் பலமாக தாக்கினார். இதில், படுகாயமடைந்த சேகர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த, நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சேகரின் உடலை கைப்பற்றி ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து வெங்கடேஷை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.