தாராபுரத்தில் கந்த சஷ்டி விழா
தாராபுரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்;
தாராபுரம் புது போலீஸ் நிலைய வீதியில் ஸ்ரீ சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிருத்திகை, கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நேற்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கணபதி வழிபாடு, முகூர்த்தக்கால் நடுதல், காப்பு கட்டு தல், கலச பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ராஜ அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வருகிற 27-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. முன்னதாக பராசக்தியிடம் வேல் பெற்று சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து 28-ந்தேதி திருக் கல்யாணம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.