சிவன்மலையில் இரண்டாவது நாள் கந்த சஷ்டி விரதம்
சிவன்மலையில் இரண்டாவது நாள் கந்த சஷ்டி விரதம் பக்தர்கள் சுவாமி தரிசனம்;
காங்கேயத்தை அடுத்த சிவன்மலையில் பிரசித்தி பெற்ற முருகன் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டவன் உத்தரவு பெட்டி இந்த கோவிலின் மிக சிறப்பு அம்சமாகும். கந்தனின் பாதம் கனவிலும் காக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. புகழ் பெற்ற சிவன்மலை முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது சிவன்மலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கி நடந்துவருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று, முருகப்பெருமான், மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் எழுந்தருளினார். பின்னர் மாலையில் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் திருவீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். திரு வீதி உலா முடிவடைந்து, சுப்பிரமணிய சுவாமி மீண்டும் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சன்னதியில் எழுந்தருளினார். இன்று (வெள்ளிக்கிழமை) 3-வது நாளாக காலை,மாலை வேளையில் பூஜைகள் நடைபெறுகிறது. 27-ந் தேதி சூர சம்ஹாரமும், 28-ந் தேதி திருகல்யாண உற்சவமும் நடக் கிறது.