சிவன்மலை கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா முருகப்பெருமான் நான்கு வீதிகளில் சூரனை வதம் செய்தார்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை சுப்ரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவையொட்டி முருகப்பெருமான் நான்கு வீதிகளில் வலம் வந்து சூரனை வதம் செய்தார்.;
காங்கேயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்ரமணிசாமி கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார திருவிழா கடந்த 22ம் தேதி 10 மணிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் திருவுலாகாட்சியுடன் துவங்கியது தொடர்ந்து அன்று மதியம் 2.30 மணிக்கு சாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளுளினார். இதை தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினார்கள். தினமும் காலை 10 மணிக்கும் மாலை 4.30 மணிக்கும் அபிஷேக ஆராதனையும் திருவுலகாட்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரவிழா நேற்று மாலை துவங்கியது. மலை அடிவாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது தொடர்ந்து பல்லக்கில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 6.50 மணியளவில் முருகப்பெருமான் போருக்கு புறப்பட்டார். தொடர்ந்து அடிவாரத்தில் உள்ள நான்கு வீதிகளிலும் போரிட்டு சூரபத்மன் தலையை கொய்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் கூடி நின்று அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர். இன்று மாலை 6 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. நாளை மஞ்சள் நீராட்டு விழாவை தொடர்ந்து சுவாமி திருமலைக்கு எழுந்தருளுகிறார். விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் நந்தகுமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.