ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்...
ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் ஐப்பசி பௌர்ணமியைத் தொடர்ந்து புதன்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி பெளர்ணமியன்று அன்னாபிஷேகம் பரம்பரை அறக்கட்டளைதாரர்களால் நடத்தப்படும். இதனையடுத்து நடைபெற்ற விழாவில் ஸ்ரீகைலாசநாதர் உடனுறை தர்மசம்வர்த்தினி அம்பாளுக்கு வாசனை திரவிய பொருட்களை கொண்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவரான ஸ்ரீகைலாசநாதர் சுவாமிக்கு அபிஷேகம் நடத்தி அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் சிவாச்சாரியார்கள் தட்சிணாமூர்த்தி சிவம்,மது தில்லைநாத சிவம், அன்னாபிஷேக நிரந்தரக் கட்டளைதாரர் சுரேஷ்குமார் குடும்பத்தினர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடந்தது.