ஆட்கள் பற்றாக்குறையால் நிர்வாகம் செய்ய தடுமாறும் போலீசார்
குமாரபாளையத்தில் ஆட்கள் பற்றாக்குறையால் நிர்வாகம் செய்ய போலீசார் தடுமாறி வருகிறார்கள்.;
குமாரபாளையம் நகரில் 33 வார்டுகள், தட்டான் குட்டை ஊராட்சி, குப்பாண்டபாளையம் ஊராட்சி, பல்லக்காபாளையம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தலா 15 வார்டுகள் உள்ளன. சுமார் 2 லட்சத்திற்கும் மேலான மக்கள் தொகை உள்ளனர். 70க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பள்ளிகளில் பல ஆயிரத்திற்கும் மேலான மாணவ, மாணவியர்கள், உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாட்டினர் என கல்வி பயின்று வருகின்றனர். பல ஸ்பின்னிங் மில்கள், 50 ஆயிரத்திற்கும் மேலான விசைத்தறிகள், 10 ஆயிரத்திற்கும் மேலான கைத்தறிகள், உள்ளிட்ட பல சார்பு தொழில் கூடங்களில் லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் சேலம் சாலை, ஆனங்கூர் சாலை, இடைப்பாடி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பல ஆயிரக்கனக்கான வணிக நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்திற்கும் பாதுகாப்பு என்றால் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் 10 , 15 போலீஸ் தான். 1970க்கு முன்னதாக இருந்த மக்கள் தொகைக்கு 45 போலீசார் இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால் தற்போதுள்ள மக்கள் தொகைக்கு மேலும் ஒரு மடங்கு போலீசார் அதிகப்படுத்த வேண்டும், ஆனால், குறைந்த அளவிலான போலீஸ் தான் உள்ளனர். இவர்களில் நீதிமன்றம், சம்மன் வினியோகம், பாதுகாப்பு பணிக்கு வெளியூர் செல்லுதல், சென்னை உயர்நீதிமன்ற பணிக்கு சிலர் செல்லுதல், பைபாஸ் வாகன ரோந்து பணி, என போக, தினமும் போலீஸ் ஸ்டேஷனில் 10 , 15 போலீஸ் தான் உள்ளனர். இவர்களால் வருகிற மனுக்களை கூட வாங்கி நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதில் விபத்து உயிரிழப்பு, அரசியல் பிரமுகர் பிரச்சாரம், என வந்து விட்டால் இவர்களும் இல்லாத நிலைதான் நீடித்து வருகிறது. இரவு நேர பணி செய்த போலீசாரை மீண்டும் பகலில் வேலை செய்ய சொல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால்தான் பல இடங்களில் போலீசார், மன உளைச்சலால் விபரீத முடிவுக்கு செல்கிறார்கள். இங்கு பணிகள் அதிகம் ஆனால் போலீசார் குறைவு என்பதால், பணியிட மாற்றத்தில் வரும் போலீசாரும் இங்கு வர தயக்கம் காட்டி வருகிறார்கள் என கூறப்படுகிறது. இதனை அறிந்த சமூக விரோதிகள் எளிதாக ஊருக்குள் வந்து, பல டூவீலர் திருட்டு, நகை பறிப்பு, பணம் பறிப்பு என்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரின் நலன் கருதி, குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் அதிக போலீசார் நியமித்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும்., என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.