மோகனூர் அருகே காவிரி ஆற்றில் தவறி விழுந்து முதியவர் பலி.
மோகனூர் அருகே காவிரி ஆற்றில் தவறி விழுந்து முதியவர் பலி போலீசார் விசாரணை.;
பரமத்தி வேலூர்,.நவ.25: நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (75), இவர் அந்த பகுதியில் உள்ள தமிழழகன் என்பவரின் விவசாய தோட்டத்தில் தங்கி தண்ணீர் பாய்ச்சும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 20-ந் தேதி தோட்டத்திற்கு சென்ற முதியவரை காணவில்லை. இதனால் சுப்பிரமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்க வில்லை. இந்தநிலையில் நேற்று காலை மோகனூர் காவிரி ஆற்றங்கரை பகுதியில் ஆண்சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் சுப்பிரமணி குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அவரது மகன் கோபி (51) சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவர் தனது தந்தை தான் என்பதை உறுதி செய்தார். இதுகுறித்து மோகனூர் போலீசில் புகார் அளித்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கவிப்பிரியா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.