அமைச்சர் மா.மதிவேந்தன், இராசிபுரம் பெரியசெக்கடியில் பழங்குடியின விவசாயிகளுக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தின் வாழை நார் (ம)வாழையில் மதிப்புகூட்டல் பயிற்சியினை தொடங்கி வைத்தார்..

அமைச்சர் மா.மதிவேந்தன், இராசிபுரம் பெரியசெக்கடியில் பழங்குடியின விவசாயிகளுக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தின் வாழை நார் (ம)வாழையில் மதிப்புகூட்டல் பயிற்சியினை தொடங்கி வைத்தார்..;

Update: 2025-11-29 13:28 GMT
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் பெரியசெக்கடியில் பழங்குடியின விவசாயிகளுக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தின் வாழை நார் மற்றும் வாழையில் மதிப்புகூட்டல் பயிற்சியினை தொடங்கி வைத்தார். ----------------- நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊனந்தாங்கல் ஊராட்சி பெரியசெக்கடியில் இன்று (29.11.2025) மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, அவர்கள் தலைமையில், பழங்குடியின விவசாயிகளுக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தின் வாழை நார் மற்றும் வாழையில் மதிப்புகூட்டல் பயிற்சியினை தொடங்கி வைத்தார். உடன் உட்பட பலர் உள்ளனர். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்ததாவது, தொல்குடியின மக்களின் வேளாண்மை மேலாண்மைத் திட்டத்தை (ஐந்திணை) விளக்கி, நாமக்கல் மாவட்டத்தின் வெற்றியைப் பறைசாற்றும் வகையில், தொல்குடியினர் வேளாண்மை மேலாண்மை திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட பழங்குடியினர் நலத்துறை மற்றும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும் வாழை நார் மற்றும் மதிப்புக் கூட்டல் திட்ட பயிற்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அனைத்து திட்டங்களும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. "திராவிட மாடல்" என்பது வெறும் வளர்ச்சி மட்டுமல்ல. அது, சமூகத்தின் விளிம்பில் நிற்கும் கடைசி மனிதனின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதும், மேலும் அவர்களுக்கு உரிய சமத்துவத்தை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக அல்லாமல், நிஜமாக, நடைமுறையில் கொண்டு சேர்ப்பதாகும். அதற்கான கொள்கை திட்டங்களில் மிக முக்கியமானது, இந்தத் தொல்குடியினரின் வேளாண்மை மேலாண்மைத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம், தற்காலிக உதவிகளை வழங்குவது அல்ல; வாழ்வாதாரத் திட்டங்கள் நிலைத்து நின்று, தலைமுறைக்கும் பயன் தர வேண்டும் என்பதேயாகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் இடைவெளிகளைக் களைந்து, அவர்களின் வசிப்பிடத்தின் பகுதியில் நிலை, பாரம்பரிய வாழ்க்கை முறை மற்றும் வள ஆதாரங்களுக்கு ஏற்ப புதிய, முன்னோடித் திட்டங்களை உருவாக்கிட அறிவுறுத்தியுள்ளார்கள். அதன் விளைவே இந்த ஐந்திணை இயக்கமாகும். இந்த ஐந்திணை திட்டம், தமிழ்நாட்டின் நிலப்பிரிவைக் கொண்டு பழங்குடிகள் வாழும் பகுதிகளை 5 பகுதிகளாகப் பிரித்து, குழுக்கள் அடிப்படையிலான அணுகுமுறையைக் கையாள்கிறது. அதாவது, மலைப் பகுதிகளுக்குத் தோட்டக்கலை, வனப் பகுதிகளுக்கு வன விளைபொருட்கள் சார்ந்த சிறுதொழில்கள், சமவெளி நிலப்பகுதிகளுக்கு வேளாண்மை , கால்நடை மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் திறன் பயிற்சி என, அந்தந்தப் பகுதிகளின் வளங்களுக்கு ஏற்ப நிலைத்து நீடித்த வருவாய் ஈட்டும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது. நமது மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, பழங்குடியினர் நல இயக்குநரகம், அங்கீகரிக்கப்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், மத்திய மற்றும் மாநில அரசின் தலைசிறந்த நிறுவனங்களான இந்தியச் சிறுதானியங்கள் ஆராய்ச்சி நிறுவனம் (ஹைதராபாத்), இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (பெங்களூர்), மத்திய வேளாண்மைப் பொறியியல் நிறுவனம் (கோயம்புத்தூர்), தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரி (சென்னை), அண்ணாமலை பல்கலைக்கழகம் (சிதம்பரம்), தேசிய மீன்வள மரபணு பேணகம் (கொச்சி), மத்திய கிழக்குகள் ஆராய்ச்சி நிறுவனம் (திருவனந்தபுரம்) மற்றும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (திருச்சி) போன்ற மாபெரும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, பழங்குடி மக்களுக்கு வளங்கள், அறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தை எளிதாகக் கிடைக்கச் செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பதிவுபெற்ற சங்கங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், இந்தத் திட்டங்களின் நிலைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. 2023-24ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்ட இந்தச் சிறப்புத் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டப் பழங்குடியின விவசாயிகள் அடைந்திருக்கும் பலன்களே, இந்த ஐந்திணை திட்டம் நிஜத்தில் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன என்பதற்குச் சிறந்த உதாரணமாகும். அந்த வகையில், மத்திய வேளாண்மைப் பொறியியல் நிறுவனம், கோயம்புத்தூருடன் இணைந்து, இங்கே ரூ.1.10 கோடி செலவில் நவீன வேளாண் இயந்திரப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விவசாயிகள் சங்கங்களாக இணைந்து, தேவையான வேளாண் உபகரணங்களைப் பகிர்ந்து கொள்ளும் முறைக்கு அரசு ஆதரவு அளிக்கிறது. மேலும் இத்திட்டத்தில் 10 சதவீதம் பழங்குடியின விவசாயிகளின் பங்களிப்பு உள்ளது. விவசாயிகளின் துணைத் தொழிலை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு கால்நடை மருத்துவக அறிவியல் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி, 50 பழங்குடியின பெண்களுக்கு மாடுகள் மற்றும் 50 பழங்குடியின பெண்களுக்கு 5 ஆடுகள் வீதம் பழங்குடியினப் பயனாளிகளுக்கு ரூ.57 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ளது. இந்தியச் சிறுதானியங்கள் ஆராய்ச்சி நிறுவனம், ஹைதராபாத்துடன் இணைந்து, ரூ.19.00 இலட்சம் செலவில் இரண்டு சிறுதானியப் பதப்படுத்தும் அலகுகள் இங்கே உருவாக்கப்படவுள்ளது. இது சிறுதானியங்களை இலாபம் தரும் உணவுப் பொருட்களாக மாற்றி, சந்தைப்படுத்த உறுதி செய்யும். தனிப்பட்ட சிறு விவசாயிகளை (1 முதல் 2 ஏக்கர் நிலம் உடையவர்களை) 100 முதல் 200 பேர் கொண்ட குழுக்களாக ஒருங்கிணைத்துச் சங்கங்கள் அமைக்கப்படுகின்றன. இந்தச் சங்கங்களின் மூலம், அவர்கள் வேளாண்மை இயந்திரங்களை திறமையாகவும், பயனுள்ள முறையிலும் பயன்படுத்தவும், தேவையான கடன் இணைப்புகளை எளிதாக அணுகவும் வழிவகுக்கப்பட்டுள்ளது. ஒற்றுமையே பலம் என்ற கொள்கை அடிப்படையில், வளங்களைப் பகிர்ந்து கொள்ளும் இந்த அமைப்பு, சமூகத்தின் நேர்மையான வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். 2025-26 நிதி ஆண்டில் ஒரு பழங்குடி விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தி ரூபாய் 50 லட்சம் மதிப்பில் விவசாய இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பாதுகாப்பு கூடம் அமைக்கப்படும். மேலும், பழங்குடியின விவசாயிகளின் கோரிக்கை ஏற்று இப்பகுதியில் ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டில் தானிய சேமிப்பு கிடங்கு புதிதாக அமைக்கப்படவுள்ளது. இதில் விவசாயிகள் பங்களிப்பு தொகை 10%. திறன் மேம்பாடு அளிக்கப்படும் சமூக உறுப்பினர்களுக்குப் பொருளாதார லாபத்தைப் பலப்படுத்த, சந்தைப்படுத்தல் மற்றும் வணிக வளர்ச்சிப் பிரிவு ஒன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு, பழங்குடி மக்களின் தனித்துவமான பொருட்கள் மற்றும் சேவைகளை தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுடன் இணைக்கும் இலக்குடன் செயல்படும். இதன் மூலம், அவர்கள் உற்பத்திக்கு நிலையான தேவையும், நியாயமான விலையும் கிடைப்பதை உறுதி செய்து, அவர்களின் வருமானம் இரண்டு மடங்காகப் பெருக வழிவகை செய்யப்படும். நாமகிரிப்பேட்டை பகுதியில் வாழை சாகுபடி அதிகளவில் பயிரிடப்படுகிறது. விவசாயிகள் மத்தியில் பொருளாதார வளர்ச்சி குறித்து வேளாண்மைப் பாரம்பரியத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து, வாழை நார், வாழை மாவு, வாழை சிப்ஸ் போன்ற மதிப்பு கூட்டல் தயாரிப்புகளை உருவாக்கிட ரூபாய் 58 லட்சம் மதிப்பீட்டில் நம் பழங்குடியின மக்களைப் புதிய தொழில் முனைவோர்களாக மாற்ற இந்தத் திராவிட மாடல் அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த நேரத்தில், இன்றைய வாழை நார் மற்றும் மதிப்புக் கூட்டல் திட்டத் தொடக்க விழா வெற்றிகரமாக அமைவதற்கு உறுதுணையாக இருக்கும் திருச்சிராப்பள்ளியில் உள்ள ஐ.சி.ஏ.ஆர் - தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தை (ICAR-NRCB) மனதாரப் பாராட்டுகிறேன். வாழைச் செடிகள், அதன் நார் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தொடர்பான நவீன அறிவியல் நுட்பங்கள் மற்றும் பயிற்சிகளை நேரடியாகப் பழங்குடியின விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் உங்களது பணி மகத்தானது. இந்தத் திட்டம் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக அமையும் என்றும், இதன் மூலம் அவர்கள் பொருளாதார ரீதியாகப் புதிய உயரங்களைத் தொடுவார்கள் என்றும் வாழ்த்தி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நாம் அனைவரும் ஒருமித்து உழைப்போம்! தொல்குடியினரின் வாழ்வாதாரம் உயரட்டும்! அவர்களின் சமத்துவம் நிஜமாகட்டும் என மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இயக்குநர், இந்தி இ.வே.ஆ.கு (தேசிய வாழை ஆராய்ச்சி மையம்) முனைவர் இரா.செல்வராஜன், பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர் திரு.ப.ராமசாமி உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், முனைவர்.க.ந.ஷிவா, முனைவர் ப.சுரேஷ்குமார், முனைவர் சி.கற்பகம், முனைவர் பிரமோத் செலக்கே ஆகியோர் தொழில்நுட்ப கலந்துரையாடல் வழங்கினார்கள்.

Similar News