மோட்டார் வாகன எப்.சி. கட்டணம் பலமடங்கு உயர்வை ரத்து செய்ய வேண்டும்!-நாமக்கல் மாவட்ட மோட்டார் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கம் போராட்டம் நடத்திட தீர்மானம்
புதிய எப்சி கட்டண உயர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் பள்ளிபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.;
நாமக்கல் மாவட்ட மோட்டார் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கம் சிஐடியு மாவட்ட குழு கூட்டம் திருச்செங்கோடு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன சட்டத்தின் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனம் வரை அனைத்திற்கும் தகுதிச்சான்றிதழ் புதுப்பித்தல் (எப்சி) கட்டணத்தை கடந்த 11 ம் தேதி முதல் பல மடங்கு உயர்த்தியது.மத்திய அரசு அறிவித்துள்ள எப்.சி கட்டண உயர்வை கடந்த 17ம் தேதி முதல் தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அழிந்து வரும் போக்குவரத்து தொழிலைப் பாதுகாத்திடவும், பல லட்சக்கணக்கான லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கோடிக்கணக்கான இரண்டு சக்கர வாகனங்கள்,இலகு ரக வேன்கள் உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மத்திய அரசு அறிவித்துள்ள எப்.சி சான்றிதழ் கட்டண உயர்வை தமிழகத்தில் வாபஸ் பெற வேண்டும் எனவும் மத்திய அரசிடம் வலியுறுத்தி புதிய எப்சி கட்டண உயர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் பள்ளிபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாவட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடைபெற்ற மாவட்ட குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.ஆனந்தன் தலைமை வகித்தார்.மாநில துணைத்தலைவர் முருகேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி துவக்கி வைத்து பேசினார்.சங்க மாவட்ட செயலாளர் சு.சுரேஷ், மாவட்ட துணை செயலாளர் எஸ்.கந்தசாமி எம்.முனியப்பன், மாவட்ட துணைத் தலைவர் டி.ஆனந்தராஜ், மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் மோகன்ராஜ், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.