தஞ்சாவூரை கலக்கும் புட் ஸ்ட்ரீட்: பலரின் வாழ்க்கைக்கு உதவிய மேயர் சண்.ராமநாதன்

அனைத்து மக்களும் எனது உறவினர்கள் போல்தான். அந்த புட் ஸ்ட்ரீட்டை நம்பி எத்தனை குடும்பங்கள் பிழைக்கின்றனர்.;

Update: 2025-12-08 12:18 GMT
தஞ்சாவூர், டிச.8- காலை வேளையில் கூட மக்கள் நடமாட முடியாத நிலையில் இருந்த பகுதி இன்று தினமும் திருவிழா போன்று எவ்வித அச்சமும் இன்றி மக்கள் உற்சாகத்துடன் வந்து செல்லும் பகுதியாக மாறியுள்ளது. இதற்கு முழுமையான பாராட்டுக்கள் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனையே சேரும். அந்த இடம் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி அருகில் அமைக்கப்பட்டுள்ள புட் ஸ்ட்ரீட்தான். இதன் நாயகனாகவே மேயர் சண்.ராமநாதன் பார்க்கப்படுகிறார். இந்த உணவுத்தெரு (புட் ஸ்ட்ரீட்) எப்படி அமைந்தது என்பதற்கு முன்பு ஒரு சின்ன பிளாஸ்பேக் பார்ப்போம். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது மன்னர் சரபோஜி கல்லூரி. இதன் எதிர்புற சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரவு நேர தள்ளுவண்டிகள் உணவகங்கள் ஒவ்வொன்றாக வைக்கப்பட்டன. நல்ல உணவுக்கும், தரத்திற்கும் கை கொடுத்து முன்னேற்றம் காண வைக்கும் தஞ்சை மக்களின் விருப்பமான இடமாக இந்த பகுதி மாறியது. ஆரம்பத்தில் கௌசா உணவுகள், பிரியாணி, சிக்கன் சமோசா, சூப், சிக்கன் உணவுகள் என்று தள்ளுவண்டியில் விற்பனை செய்யப்பட்டன. இதற்கு மக்கள் மத்தியில் கிடைத்த ஆர்வம் பல்வேறு வாலிபர்களையும் சொந்த தொழில் தொடங்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனால் விதவிதமான பானிபூரி கடைகள், சேலம் தட்டுவடை, சிக்கன் உணவுகளின் பலவிதமானவை, டிபன் சென்டர், குல்பி ஐஸ் வகைகள் என்று ஒன்றல்ல... இரண்டல்ல சுமார் 30க்கும் அதிகமான கடைகள் அப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன. மக்கள் கூட்டமும் அதிகரித்தது. மக்கள் தாங்கள் வரும் வாகனங்களை அப்பகுதியில் வரிசையாக நிறுத்த இடமில்லை. இதனால் சாலையில் நிறுத்தியதால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மிகவும் முக்கியமான சாலையாகவும், எப்பொழுதும் வாகன போக்குவரத்து இருக்கும் பகுதி என்பதால் இந்த போக்குவரத்து நெரிசல் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனால் நெடுஞ்சாலைத்துறையினர் அதிரடியாக அப்பகுதியில் உணவு கடைகள் அனைத்தையும் அப்புறப்படுத்தினர். வாழ்க்கையில் கொஞ்சமாவது பொருளாதாரத்தில் உயர்ந்து விடலாம். குடும்பத்தினரை காப்பாற்றி விடலாம் என்று கடைகள் அமைத்த வாலிபர்கள் இந்த நடவடிக்கையால் வெகுவாக பாதிக்கப்பட்டனர். முற்றிலும் வருமானம் இழப்பு ஏற்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர். பின்னர் அவர்கள் ஒன்று சேர்ந்து தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தங்கள் நிலை குறித்து தெரிவித்துள்ளனர். பின்னர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆலோசனையின் படி உணவகத் தெரு அமைக்க இடம் தேர்வு நடத்தப்பட்டு குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி அருகில் அனைத்து கடைகளும் வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. உணவகத் தெரு அமைக்க தேர்வு செய்யப்பட்ட பகுதி காலை 11 மணிக்கு மேல் மக்கள் நடந்து செல்ல அச்சப்படும் பகுதியாக இருந்தது. இங்கு உணவகத் தெரு அமைக்கப்பட்டவுடன் அந்த இடத்தின் அடையாளமே மாறி போய்விட்டது. சுமார் பெரியஅளவில், சிறிய அளவில் என்று சுமார் 50க்கும் அதிகமான கடைகள் உணவகத் தெருவை அலங்கரிக்க தொடங்கின. ஆரம்பத்தில் சிறிய அளவில் வந்த மக்கள் இப்போது தங்களின் பேராதரவை தந்து வருகின்றனர். தாராளமாக வாகனங்கள் நிறுத்த இடம், அமைதியான சூழலில் உணவுகள் சாப்பிடலாம் என்பதால் தஞ்சை மக்கள் குடும்பம், குடும்பமாக இங்கு வருகை தருகின்றனர். வார இறுதி நாட்களில் இங்கு அதிகளவில் மக்கள் உணவுகளை ரசித்து ருசித்து, சாப்பிடுகின்றனர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் இந்த உணவுத் தெருவை நம்பி தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். மண்சாலையாக இருந்த இந்த இடத்தில் தற்போது மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மேற்கொண்ட நடவடிக்கையால் புத்தம் புதிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உணவுத் தெருவில் கடைகள் அமைத்துள்ளவர்கள் பயன் பெறும் வகையில் தண்ணீர் வசதிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த வாடகை கட்டணத்தில் இவர்கள் கடைகள் அமைக்க ஏற்பாடுகள் செய்துள்ளார் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன். இதுகுறித்து இப்பகுதியில் உணவுக்கடைகள் வைத்திருப்பவர்கள் தரப்பில் கூறுகையில், புட் ஸ்ட்ரீட் நாயகன் என்றால் அது மேயர்தான். பல்வேறு குடும்பங்களுக்கும் பொருளாதாரத்தை ஏற்படுத்தி உள்ளார். புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் வசதி உட்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர உள்ளனர். இதை நாங்கள் எப்போதும் மறக்கமாட்டோம். இந்த கடைகளை நம்பி வேலை பார்ப்பவர்கள் குடும்பத்தினர் தற்போது மகிழ்ச்சியாக உள்ளனர் என்றார். இதுகுறித்து மேயர் சண்.ராமநாதனிடம் கேட்டபோது, அனைத்து மக்களும் எனது உறவினர்கள் போல்தான். அந்த புட் ஸ்ட்ரீட்டை நம்பி எத்தனை குடும்பங்கள் பிழைக்கின்றனர். அவர்கள் வாழ்வில் நிலையான பொருளாதார வசதி ஏற்படும். அதேபோல் மாநகராட்சி மூலம் மிகக்குறைந்த வாடகைக்கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் மாநகராட்சிக்கும் வருவாய் கிடைக்கும். அவர்களும் வாடகை கொடுக்கிறோம் என்பதால் இன்னும் கூடுதலாக தரமான உணவுகளை கொடுப்பார்கள். அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்பதுதான் எங்கள் அரசின் நோக்கம், விருப்பம் என்றார்.

Similar News