தஞ்சையில் பரபரப்பு... ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் நகை திருட்டு
பீரோவில் இருந்த 11 சவரன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளி விளக்கு ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்;
தஞ்சாவூர்: தஞ்சை அருகே ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் 11 சவரன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன்கோட்டை உக்கடை மேலத்தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (73). ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர். இவரது மனைவி சரோஜா (69). இவர்களின் மூன்றாவது மகள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மகளின் சிகிச்சைக்காக குணசேகரன் தனது குடும்பத்தினருடன் தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் கவுரி நகர் 5ம் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். குணசேகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகளை அழைத்துக் கொண்டு சிகிச்சைக்காக சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி பட்டுக்கோட்டையில் உள்ள தங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்த தகவல் சரோஜாவுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் ரெட்டிப்பாளையத்தில் தற்போது வசித்து வரும் வீட்டை பூட்டிக் கொண்டு சரோஜா பட்டுக்கோட்டைக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று மதியம் சரோஜா ரெட்டிப்பாளையம் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் பீரோவில் இருந்த 11 சவரன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளி விளக்கு ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசில் சரோஜா புகார் செய்தார். இதன்பேரில் கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.