திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலை உருவாகி உள்ளது!-பாஜக மூத்த தலைவர் ஹெச்.இராஜா காட்டம்
வாக்காளர்கள் யாரும் விடுபடக்கூடாது என்பதற்காகவே பாஜக தமிழகம் முழுவதும் இதுபோன்ற பயிலரங்கு மற்றும் மாநாடுகளை நடத்தி வருகிறது. மூன்று நாட்களில் 234 தொகுதிகளில் இந்த கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.;
நாமக்கல்லில் பாஜக சார்பில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பயிலரங்கு மற்றும் மாநாட்டில் கலந்துகொண்ட அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.இராஜா தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு சட்ட ஒழுங்கு சீர்கேட்டால் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலை உருவாகி உள்ளது என்று பேட்டியின் போது கூறினார். நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில் நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பயிலரங்கு மற்றும் மாநாடு நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் (டிசம்பர் 14) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. பாஜக கிழக்கு மாவட்ட மாவட்ட தலைவர் கே.பி.சரவணன் தலைமை வகித்தார்.இந்த பயிலரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, கட்சி நிர்வாகிகளுக்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய கட்சிப் பணிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்...கேரள மாநில உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில், தலைநகர் திருவனந்தபுரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது. அதேபோல பாலக்காடு உள்ளிட்ட நகராட்சிகளிலும் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட்களின் இறுதி மாநிலமாக கேரளா மட்டும்தான் இருந்து வருகிறது. மேற்கு வங்கம், திரிபுரா போன்ற மாநிலங்களிலும் பின்னடைவை சந்தித்துள்ளன. வருகின்ற மே மாதத்தில் அவர்களின் காலம் முடிவுக்கு வரும்.பாஜகவுக்கு மிக அதிக அளவில் மக்கள் வாக்களித்துள்ளார்கள்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளில் சிறுபான்மையினரை விட்டுவிடுவார்கள் என்ற தவறான கருத்தை பரப்புகிறார்கள். தேர்தல் ஆணையம் முறைப்படி வெளிப்படுத்தன்மையோடு செயல்பட்டு வருகிறது. இதனை எதிர்க்கும் திமுக, வாக்கு சாவடி நிலை அலுவலர்களிடம் மொத்தமாக விண்ணப்பங்களைவாங்கி, பெயர் சேர்த்தல் பணிகளை செய்வதாக புகார்கள் எழுந்தன. வாக்காளர்கள் யாரும் விடுபடக்கூடாது என்பதற்காகவே பாஜக தமிழகம் முழுவதும் இதுபோன்ற பயிலரங்கு மற்றும் மாநாடுகளை நடத்தி வருகிறது. மூன்று நாட்களில் 234 தொகுதிகளில் இந்த கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலில், கோவை, தென் சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் வாக்குச்சாவடிகளில் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் விடுபட்டிருந்தனர். பாஜகவிற்கு அதிக வாக்குகள் கிடைக்கும் பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டு விட்டன. இறந்த வாக்காளர்களின் பெயரை நீக்காமல் இருந்தால், திமுகவிற்கு வாக்காக மாறிவிடும். இறந்தவர்கள் வாக்களிக்கும் கட்சியாக திமுக உள்ளது.பாஜகவிற்கு நல்ல செல்வாக்கு உள்ள பகுதிகளில் வாக்காளர்களை நீக்குவது உள்ளிட்ட முறைகேடுகளை தடுப்பதற்கு, பாஜக நடத்தும் இந்த பயிலரங்கு பயன்படும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு, தேர்தல் ஆணையம் வழங்கும் 2 பிரதிகளை எடுத்துக் கொண்டு வீடு வீடாக சென்று, வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறியலாம்.கட்சியின் வளர்ச்சிக்கும் இந்த மாநாடுகள் உறுதுணையாக இருக்கும் என்றார். மேலும், அதிமுக கூட்டணியில் வரவுள்ள கட்சிகள் குறித்த பிரச்னைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த இராஜா, கர்நாடக மாநிலத்தில் 1981-ம் ஆண்டு, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பிஜேபி 44 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றனர். அப்போது ஜனதாதள் (எஸ்), ஹேக்டேவை பாஜக ஆதரித்ததால், ஆட்சி அமைத்தார். ஓராண்டில் சட்டமன்றத்தை கலைத்து, வெற்றி பெற்றார். கட்சிகளுக்குள் கூட்டணி இல்லை என்றாலும், மக்கள் ஆதரவு ஹேக்டே-க்கு இருந்தது. இதனால் பாஜக வெற்றி பெற முடியவில்லை. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கிறார்களோ இல்லையோ, மக்கள் தங்கள் விருப்பப்படி செயல்படுவார்கள். தமிழகத்தில் இப்போது இருக்கின்ற அரசுக்கு எதிரான அலை மிகவும் அதிகரித்துவிட்டது. காரணம் கடந்த 55 மாதங்களில் 6,700 படுகொலைகள் நடந்துள்ளன. இதுபோன்ற குற்ற செயல்களுக்கு காரணமாக உள்ள மது மற்றும் போதை பொருட்களை தமிழ்நாடு அரசால் நீக்க முடியவில்லை. 2021 ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, இந்தியாவிலேயே அதிக போதை பொருள் பாதிக்கப்பட்ட மாநிலமாக பஞ்சாப் இருந்து வந்தது. ஆனால் இன்று போதைப்பொருள் அதிகமாக பயன்படுத்தும் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. சங்கரன்கோவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக போதை எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டதில் மாநில ஆளுநர் கலந்துகொண்டு, இதுவரை ஒரு கிராமாவது தமிழ்நாடு போலீஸ் சிந்தடிக் டிரக் கைப்பற்றி உள்ளதா என கேள்வி எழுப்பினார். இதற்கு இதுவரை தமிழ்நாடு அரசோ / முதல்வரோ பதிலளிக்கவில்லை. ஆனால் திமுகவின் அயலக அணி நிர்வாகி ஜாஃபர் சாதிக், மூன்றாயிரம் கோடிக்கு சிந்தடிக் டிரக் (மெட்டபத்தமைன்) கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு, மருத்துவ துறை மற்றும் திரைப்படத் துறையில் முதலீடு செய்துள்ளார். எனவே. தமிழகத்தின் ஆளும் கட்சியின் முதல் குடும்பம், போதைப் பொருள் மூலம் கிடைத்த பணத்தை பயன்படுத்தி உள்ளார்கள் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு குற்றம் சாட்டியுள்ளது. சிபிஎஸ்இ உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களின் முன்பு போதைப் பொருட்களை விற்பனை செய்து, அடுத்த தலைமுறை மாணவர்களை முடக்கிப் போடுகிறார்கள். இதனால் தமிழ்நாடு எதிர்காலம் இல்லாமல் ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இருண்டு போகும். எனவே அடுத்த தலைமுறையினரை அழித்துக் கொண்டிருக்கும் ஒரு தீய அரசு ஸ்டாலின் அரசாங்கம் ஆகும். அந்த குடும்பம் தமிழகத்தின் அடுத்த தலைமுறையை அழித்துக் கொண்டிருக்கும் கொண்டிருக்கிறது. அதனால் திமுகவை தூக்கி எறிய வேண்டுமென மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அவர்களுக்கு எதிரான அலை அதிகரித்து உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பக்கம் மக்கள் வந்துவிடுவார்கள். அதனால் கூட்டணியை பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார் மேலும்,நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரப் பகுதிகளில் கிராவல் மண் அள்ளிச் செல்கின்றனர் என தெரியவந்துள்ளது. வேறு இடத்தில் அனுமதி பெற்று அனுமதி பெறாத இடங்களில் கிராவல் மண்ணை அள்ளிச் செல்கின்றனர். கனிம வளத்துறை, உதவி இயக்குநர் உள்ளிட்டவர் இதற்கு துணை போவதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் நாமக்கல் மாவட்ட பாஜக போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதே திராவிட மாதிரியாகும். இதை தடுத்து சட்டரீதியாக இருக்கும் பணிகளில் பாஜக ஈடுபடும். அதேபோல, நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக செல்லும் பேருந்துகள் அனைத்தும், பயணிகளின் நலன் கருதி, பழைய பேருந்து நிலையத்திற்கு உள்ளே சென்று வர வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் இராஜா நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இந்த பயிலரங்கு மற்றும் மாநாட்டில் நாமக்கல் மாவட்ட பாஜகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.