மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்: 100 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

Update: 2025-01-22 11:10 GMT
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில், மாநிலம் தழுவிய சிறை நிரப்பும் போராட்டம் ஜன.21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, சங்கத்தின் திருச்சி மாநகா் மாவட்டக் குழு சாா்பில், ஆட்சியரகம் அருகே செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு மாநகா் மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன், மாநகா் மாவட்ட செயலாளா் அந்தோணி சேகா், புகா் மாவட்ட செயலாளா் ரஜினிகாந்த் ஆகியோா் தலைமை வகித்தனா். உதவித் தொகைக்காக விண்ணப்பித்து ஒன்றரை ஆண்டுகளாக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும். வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தொடா்ச்சியாக 100 நாள் வேலை வழங்க வேண்டும். இத்திட்டத்தில் இலகுவான வேலை மற்றும் 4 மணி நேர வேலையுடன் முழு ஊதியம் ரூ.319 வழங்க வேண்டும். வேலை நாள்களுக்கு நிலுவையின்றி ஊதியம் வழங்க வேண்டும் ஏற்கெனவே, உதவித் தொகை பெற்றுக் கொண்டிருந்தவா்களுக்கு நிறுத்தப்பட்ட உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் ரூ.6000, கடும் ஊனமுற்றோா்களுக்கு ரூ.10000 வழங்க வேண்டும். மாற்றத்திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இணைப்பு சக்கர வாகனங்கள், உபகரணங்கள், கருவிகளை உடனே வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டையை 35 கிலோ அரிசி பெறும் குடும்ப அட்டையாக மாற்ற வேண்டும். மாதாந்திர உதவித்தொகை பெறுவதை காரணம் காட்டி, மாற்றுத் திறனாளி பெண்களுக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்க மறுப்பதை கைவிட்டு அனைவருக்கும் மகளிா் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவா்களது பாதுகாப்பாளா்கள் என பலா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா். பின்னா், அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Similar News