மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1009 கோடி வங்கிக் கடன் இலக்கு

தூத்துக்குடி மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1009 கோடி வங்கிக் கடன் இலக்கு;

Update: 2025-09-26 06:22 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக் கடன் இலக்கு ரூ.1009 கோடி என நிர்ணயிக்கப்பட்டு, நாளது தேதி வரை ரூ.487.9 கோடி எய்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியினை சேலத்தில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக ஊரகப் பகுதிகளில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நகர்புற பகுதிகளில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக கிராமப்புறங்களில் உள்ள ஏழை மகளிரை ஒருங்கிணைத்து சுய உதவிக்குழு அமைத்தல், பயிற்சிகள் வழங்குதல், மக்கள் அமைப்புகளை உருவாக்குதல், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தேவையான கடன் பெற்று தருதல், வாழ்வாதார தொழில்களில் ஈடுபட வைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தகுதியான நபர்களுக்கு தொழில்திறன் பயிற்சிகள் வழங்குதல் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சர் அவர்களின் காலை உணவு திட்டத்தினை செயல்படுத்துதல் போன்ற பணிகளும் மகளிர் சுய உதவிக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக நகர்புற பகுதிகளில் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் அமைத்தல் பயிற்சி வழங்குதல், நகர்புற வாழ்வாதார மையம் மூலமாக சேவைகள் வழங்குதல் தொழில்முனைவோர்களை உருவாக்குதல் மற்றும் தொழில்திறன் பயிற்சிகள் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் பெறுதல் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் அரசின் மூலமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதனை தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக எய்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-2026 ஆம் ஆண்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5324 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக் கடன் இலக்கு ரூ.1009 கோடி என நிர்ணயிக்கப்பட்டு, நாளது தேதி வரை ரூ.487.9 கோடி எய்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் தகுதியான குழுக்களை தரமதிப்பீடு செய்து வங்கிகள் மூலமாக கடன் பெற்று கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த கடனுதவிகள் பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்களது மனம் நிறைந்த மகிழ்ச்சியை அடைந்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்

Similar News