கல்லணை திறப்பு தேதி மாற்றம்: ஜூன் 15 ல் முதல்வர் திறந்து வைக்கிறார்

திறப்பு;

Update: 2025-06-13 16:11 GMT
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணை திறப்பு தேதி மாற்றம் செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) மாலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையைத் தமிழக முதல்வர் வியாழக்கிழமை (ஜூன் 12) திறந்து வைத்தார். இந்நிலையில், தமிழக முதல்வர் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறார். எனவே, கல்லணையையும் தமிழக முதல்வர் திறந்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டால், கல்லணையை ஜூன் 16 ஆம் தேதி திறப்பது வழக்கம். இதன் அடிப்படையில், மேட்டூர் அணையை ஜூன் 16 ஆம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், நீர் வரத்து விரைவாக இருப்பதால், கல்லணைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலையே தண்ணீர் வந்துவிடும் என எதிர்பார்கப்படுகிறது. எனவே, தமிழக முதல்வர் கல்லணையை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கவுள்ளார். இதனிடையே, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறந்து வைக்கப்படவுள்ளதை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தமிழக முதல்வர் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு வருகிறார். பின்னர் கல்லணையை மாலை 4 மணியளவில் திறந்து வைக்கிறார். இதையடுத்து, தஞ்சாவூருக்கு வரும் தமிழக முதல்வர் பழைய பேருந்து நிலையம் அருகே கருணாநிதி சிலையைத் திறந்து வைப்பதற்கு சாலை வழியாக செல்கிறார். கழகத் தோழர்கள் சாலையில் நின்று வரவேற்பர். சிலை திறந்து வைக்கப்பட்ட பின்னர், இரவு தஞ்சாவூரிலேயே தங்கிவிட்டு, திங்கள்கிழமை காலை திருமண விழாவில் கலந்து கொண்டு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என்றார் அமைச்சர் நேரு. அப்போது, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். கல்லணையை இதுவரை அமைச்சர்கள் திறந்து வைத்து வந்த நிலையில், முதல் முறையாக தமிழக முதல்வர் திறந்து வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News