ஒ. மேட்டுப்பட்டியில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியனின் 16 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒ. மேட்டுப்பட்டியில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியனின் 16 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-02-21 12:10 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒ. மேட்டுப்பட்டியில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியனின் 16 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், கடம்பூர் ராஜு, ராஜலட்சுமி உள்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சுந்தரபாண்டியனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுகவை பொறுத்தவரையில் அண்ணா முதல் அனைவருமே தமிழ் மொழியை தன் இமை போல் காத்தவர்கள் என்றார். மேலும் அதிமுகவை பொருத்தமட்டில் இரு மொழி கொள்கை தான் எங்கள் உயிர் மூச்சு என்ற நிலைப்பாட்டில் கொள்கையோடு நடந்து வருகிறோம் எனவும் திமுகவை சேர்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தி வருகிறார்கள் எனவும் இதை அரசியலாக்கி இன்றைக்கு இரு மொழி கொள்கை தான் எங்கள் கொள்கை என்று சொல்லி கபட நாடகம் ஆடுகிறார்கள் என விமர்சனம் செய்தார். மேலும் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த விவகாரம் எதிரொளித்து திமுக ஆட்சி வீட்டுக்கு சென்றால் தான் நமக்கு விடிவு காலம் என்றார். மேலும் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு திமுக செய்வதற்கு பாஜக எதிர்வினை ஆற்றுவது என்பது அரசியலில் இயல்பான விஷயம் என்றார். தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமர் மோடி தமிழக வரும் போது Go Back modi என்று சொன்னார்கள் எனவும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு வெள்ளைக்கொடி காட்டினார்கள் என விமர்சனம் செய்தார். மேலும் அவரவர் கட்சியின் தலைவர்களை மற்றவர்கள் இழிவு படுத்தும் போது அதற்கு அக்கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்வினை ஆற்றுவார்கள் என்றார். மேலும் இப்படிப்பட்ட மோசமான அரசியலை எப்போதும் திமுக தான் முன்னெடுக்கும் என்றார். மேலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தலைவர்களை இழிவு படுத்துவது தான் திமுகவின் கைவந்த கலை எனவும் இவர்களுக்கு பாஜகவினர் எதிர் வினை ஆற்றுகிறார்கள் என்றார். மேலும் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக நூறு சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்னர் 2016 தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றது போல் உண்மையாகவே 90 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறும் மு.க ஸ்டாலின் வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டியிட தைரியமும் தெம்புமும் இருக்கிறதா? என கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருக்கும் போதும் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கையை பாஜகவுடன் சேர்ந்திருக்கும் போதே அதிமுக ஏற்கவில்லை என்றார். மேலும் பேசிய கடம்பூர் ராஜு தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து இருக்கும் திமுக நாடாளுமன்றத்திற்கு சென்று சாதிக்க முடியவில்லை என்றால் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் எங்களை வற்புறுத்தக் கூடாது எனவும் தமிழகத்திற்கு கல்வி நிதி வேண்டும் என சொல்வதற்கு திமுகவிற்கு தைரியம் இருக்கிறதா என்றார். மேலும் பேசிய கடம்பூர் ராஜு மத்திய அரசுடன் மோதல் போக்கு இருப்பது போல் காட்டிக்கொண்டு எந்த வித நிதியும் பெறாமல் ஆனால் திமுகவுக்கு என்று ஒரு பிரச்சினை வரும்போது மத்திய அரசுடன் இணக்கமாக செல்கிறார்கள் எனவும் திமுக மத்திய அரசுக்கு ஒரு பக்கம் கருப்பு கொடியும் ஒரு பக்கம் வெள்ளை கொடியும் காட்டிக் கொள்வது தான் திமுகவின் இயல்பு என விமர்சனம் செய்தார். மேலும் பேசிய கடம்பூர் ராஜு அதிமுகவை பொறுத்த வரையில் தேர்தல் கூட்டணியை முடிவு செய்வது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் எனவும் தவெக உள்ளிட்ட எந்த கட்சி உடன் கூட்டணி வைக்கப் போகிறோம் என்பதை உரிய நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவு செய்வார் என்றார். மேலும் புகழேந்தி தமிழ்நாட்டை சேர்ந்தவரும் இல்லை அதிமுகவை சேர்ந்தவரும் இல்லை எனவும் அவருக்கு பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார்.

Similar News