காரில் புகையிலை பொருட்கள் கடத்தல் : 2பேர் கைது
பெங்களூருவில் இருந்து கோவில்பட்டிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 335 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 வாலிபர்களை நேற்று போலீசார் கைது செய்தனர்.;

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த சில மாதங்களாகவே போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பொதுமக்களிடமிருந்து வந்த புகாரையடுத்து, போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகநாதன் உத்தரவின் பேரில் பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் பார்க் ரோடு, வீரவாஞ்சி நகர், கதிரேசன் கோவில், கிருஷ்ணா நகர், மந்தித் தோப்பு ஆகிய பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீரவாஞ்சி நகர் வழியாக கதிரேசன் கோவில் மலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் வேகமாக வந்த காரை வழிமறித்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட 335 பாக்கெட் புகையிலை பொருட்களை 5 மூட்டைகளில் காரில் கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த புகையிலை ெபாருட்களை காருடன் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த புகையிலை பொருட்களை கடத்தி வந்தவர்கள், விருதுநகர் மாவட்டம் உப்பத்தூரை சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜ்குமார் (வயது 31), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காந்திலால் கரோடா ஜல்வார் மகன் செவன் குமார் ( 29) ஆகிய 2 பேர் என ெதரியவந்தது. மேலும், இவர்கள் பெங்களூருவில் இருந்து கோவில்பட்டிக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர்