கருப்பூர் அருகே ஸ்கேன் மையம் நடத்திய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
3 மாதங்களில் 30 கருக்கலைப்பு செய்தது அம்பலமாகி உள்ளது.;
சேலம் கருப்பூர் கோடக்கவுண்டம்பட்டி, வசந்தம் நகர் பகுதியில் அனுமதி இல்லாமல் ஸ்கேன் மையம் நடத்தப்பட்டு வருவதாகவும், அந்த ஸ்கேன் மையத்தில் குழந்தையின் பாலினம் கண்டறிவதுடன், கருக்கலைப்பு செய்யப்படுவதாகும் புகார் எழுந்தது. அப்படி கருக்கலைப்பு செய்த பெண் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து ஓமலூர் மருத்துவ அலுவலர் ஹெலன்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் சுகன்யா (வயது 33) என்பவரது வீட்டில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கலைவாணி (30), கனகா, சதீஷ்குமார் மற்றும் சிலர் கும்பலாக சேர்ந்து கடந்த 3 மாதங்களில் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக கருப்பூர் போலீசில் அதிகாரிகள் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகன்யா, கலைவாணி ஆகிய 2 பேரை கைது செய்தனர். கனகா, சதீஷ்குமார் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே மேட்டூர் பகுதியில் கருக்கலைப்பு மையம் நடத்திய விவகாரத்தில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருந்தது. எனவே அவர்களுக்கும், தற்போது கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.