இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 2025-க்குள் 6 கல்லூரிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தொடங்கப்படவிருந்த 6 கல்லூரிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றம் ஒருசில வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 6 கல்லூரிகளும் இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும் என்று அந்தத் துறையின் அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.;

தமிழக சட்டப் பேரவையில் இன்று (மார்ச் 19) கேள்வி நேரத்தின்போது, திருத்தணி எம்.எல்.ஏ. எஸ்.சந்திரன் பேசும்போது, “திருத்தணி தொகுதியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மகளிர் கலைக் கல்லூரி அமைக்கப்படுமா?” என கேள்வி எழுப்பினார்.அதற்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பதிலில், “திமுக அரசு பதவி ஏற்றதும் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 10 கல்லூரிகள் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதை தடுக்கும் நோக்கில் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு நான்கு கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டது. முதல்வரின் கொளத்தூர் தொகுதியிலும், உணவுத் துறை அமைச்சரின் ஒட்டன்சத்திரம் தொகுதியிலும், திருச்செங்கோடு தொகுதியிலும், விளாத்திக்குளம் தொகுதியிலும் கல்லூரிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. நீதிமன்ற வழக்கால் 6 கல்லூரிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றம் ஒரு சில வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 6 கல்லூரிகளும் இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும். அதன்பிறகு திருத்தணியிலும் ஒரு கல்லூரி தொடங்கப்படும்” என்று தெரிவித்தார். பால்வளத் துறையில் ரூ.1,850 கோடியில் 18 திட்டங்கள்: பேரவையில் கேள்வி நேரத்தின்போது, திமுக எம்.எல்.ஏ., ஏபி.நந்தகுமார் பேசும்போது, “அணைக்கட்டு தொகுதி, அணைக்கட்டு, ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, ஊசூர் ஆகிய இடங்களில் பால் குளிர்விக்கும் மையங்கள் அமைக்கப்படுமா?” என கேட்டார். அதற்கு பால்வளத் துறை அமைச்சர் ராஜ கண்ணனப்பன், “பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க வேண்டுமானால் அப்பகுதியில் தினமும் 5 ஆயிரம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஆனால் உறுப்பினர் தெரிவிக்கும் இடங்களில் அந்தளவுக்கு பால் கொள்முதல் இல்லை. கடந்த ஆட்சியை விட கூடுதலாக 11 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால்வளத் துறையில் ரூ.1,850 கோடியில் 18 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்தார்.