நத்தம் அருகே 212 கிலோ குட்கா பறிமுதல்
நத்தம் அருகே 212 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது: ஒருவருக்கு வலை
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப்பொருட்கள் விற்கப்படுவதாக எஸ்.பி அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திண்டுக்கல் ஊரக உட்கோட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆலோசனையின்பேரில் நத்தம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையில் எஸ்ஐ அருள்குமார், ஏட்டு ஆண்டிச்சாமி ஆகியோர் கோமணம்பட்டி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் அப்பகுதியில் உள்ள ஆண்டிச்சாமி (36) என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில், சித்திரையன் (55) என்பவரது வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 400 மதிப்புள்ள 212 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், ஆண்டிச்சாமி, சித்திரையன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மதுக்காரம்பட்டியைச் சேர்ந்த விஜய் (27) என்பவரை தேடி வருகின்றனர்.