குமரியில் ஒற்றை மாணவனுக்கு ஆண்டுக்கு ரூ.24லட்ச செலவு

பள்ளி கல்வி துறை அசத்தல்;

Update: 2025-08-29 03:16 GMT
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகாவில் உள்ள இரத்தினபுரம் என்ற கிராமத்தில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. ஐந்து வகுப்புகள் கொண்ட இப்பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டும்தான் படிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா..? ஆனால் அதுதான் நிஜம். அதைவிட ஆச்சரியம் அந்த ஒரு மாணவனுக்கு இரண்டு ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பது. நான்காம் வகுப்பு படிக்கும் அந்த மாணவனுக்காக நடக்கும் “ராஜ மரியாதை” அப் பிராந்திய மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது! இந்தப் பள்ளியில் ஒரே ஒரு மாணவனுக்காக ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என இருவர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, இந்த மாணவனுக்கு விசாலமான வகுப்பறை, பெரிய கலையரங்கம் என அனைத்து வசதிகளும் தயார்! மாதம் சுமார் ஒரு லட்ச ரூபாய் தலா சம்பளம் பெறும் இந்த இரு ஆசிரியர்களும், ஒரு மாணவனின் வருகையை எதிர்நோக்கி அன்றாடம் பள்ளியில் காத்திருக்கின்றனர். ஆண்டுக்கு சுமார் 24 லட்ச ரூபாய் செலவில் இந்த மாணவனின் கல்விக்காக பள்ளியைத் திறந்து வைத்திருக்கும் தமிழக பள்ளிக்கல்வி துறையின் இந்த நடவடிக்கை , இப் பகுதி மக்களிடையே வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. “ஒரு மாணவனுக்காக இவ்வளவு செலவு செய்து பள்ளியை நடத்த வேண்டுமா? என்று ஒரு சாராரும் ஒரு குழந்தையின் கல்விக்காக அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது பாராட்டுக்குரியது தானே என்கிறார்கள் மற்றொரு சாரார். இந்த மாணவன் வேறு பள்ளிக்கு சென்று விட்டால் தங்கள் வேலைக்கு ஆபத்து என்பதால் இரு ஆசிரியர்களும் மாணவருக்கு ராஜ மரியாதை அளித்து வருவதாக உள்ளூர் மக்கள் கிசுகிசுக்கின்றனர். பல அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர் இல்லாமல் வசதிகள் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருவது ஒரு பக்கம் இருக்க.. இப்படி ஒரே ஒரு மாணவருக்காக ராஜமரியாதை உடன் ஒரு பள்ளி நடத்தப்படுவது கல்வித்துறையின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை அல்லது அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்பதே நிஜம். அது சரி அந்த மாணவன் பள்ளிக்கு ஒரு நாள் லீவு எடுத்தால் 2 ஆசிரியைகளும் என்ன செய்வார்களோ…?

Similar News