சிவகாசி ஆணைக்குட்டம் அணையில் ரூ.28.20 கோடி மதிப்பில் புனரமைப்பு பணியை அமைக்க தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்
சிவகாசி ஆணைக்குட்டம் அணையில் ரூ.28.20 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாண்புமிகு நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆணைக்குட்டம் அணையில் ரூ.28.20 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள்,சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆணைக்குட்டம் அணையானது விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் ஆணைக்குட்டம் கிராமத்தில் 1984-1989 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டு, 1989 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. ஆணைக்குட்டம் நீர்த்தேக்கம் 2940 மீட்டர் நீளம் கொண்டது. இதில் நெடுகை 1178மீ - 1295மீ ல் 9 எண்ணம் கொண்ட நீர்ப்போக்கி கதவணைகள் உள்ளன. மேலும் நெடுகை 1350மீ ல் ஒரு இடதுபுற கால்வாய் கொண்ட பாசன மதகு உள்ளது. இந்த அணையின் நீர்வரத்து பகுதி 591 சதுர கி.மீ மற்றும் கொள்ளளவு 125 மீ கனஅடி, இவ்வணையில் வெள்ள நீர் வெளியேற்றம் அளவு நொடிக்கு 1469 மீ ஆகும். ஆணைக்குட்டம் நீர்த்தேக்கத்தில் 7.5 மீட்டர் கொண்ட உயர்வில் அதிகபட்சமாக 125.75 மி.கனஅடி தண்ணீர் தேக்கலாம். 2024-25ம் ஆண்டு அறிவிப்பு திட்டத்தில் ஆணைக்குட்டம் நீர்த்தேக்கத்தின் 9 எண்ணம் கொண்ட கதவணைகளை புதுப்பிக்கும் பணிக்கு ரூ.28.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கி, தற்பொழுது 85 சதவீத பணிகள் முடிவுற்று பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மேற்கொள்வதினால் அணையின் மதகுகளில் நீர் கசிவு நிறுத்தப்படுவதுடன் கரை பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டு ஆணைக்குட்டம் அணையின் முழு கொள்ளளவான 125.75 மி.கனஅடி உறுதி செய்யப்படும். இதனால் 4500 ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும் என மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர்கள், உதவிபொறியாளர்கள், வட்டாட்சியர், உள்ளாட்சி பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள் உட்படபலர் கலந்து கொண்டனர்.