வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி: அரசு நிவாரணம் வழங்க கிராம மக்கள் கோரிக்கை
ஓட்டப்பிடாரம் அருகே வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் பலியாகின. பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;

ஓட்டப்பிடாரம் அருகே வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் பலியாகின. பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே வடக்குகைலாசபுரம் கிராமத்தை சேர்ந்த சிவனான் மனைவி வேலம்மாள் (75). இவர் 10 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் இவர் கிராமத்துக்கு அருகேயுள்ள காட்டுப்பகுதிக்கு ஆடுகளை ஓட்டிச்ெசன்று மேய்ச்சலுக்கு விடுவதும், மாலையில் வீடு அருேகயுள்ள கூடாரத்தில் அவற்றை அடைத்து வைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று வேலம்மாள் காட்டில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 10-க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் தீடீரென புல் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் மீது பாய்ந்துள்ளன. இதில் ஆடுகள் சிதறி ஓடியுள்ளன. அப்போது வெறிநாய்கள் துரத்தி சென்று ஆடுகளை கடித்து குதறின. வேலம்மாளும், அருகில் இருந்தவர்களும் ஓடிச்சென்று வெறிநாய்களை துரத்த முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள் 3 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறியுள்ளன. இதில் அந்த 3 ஆடுகளும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியாகின. மற்ற ஆடுகள், வெறிநாய்களிடம் இருந்து தப்பிவிட்டன. பலியான ஆடுகளை பார்த்து வேலம்மாள் கதறி அழுதுள்ளார். அந்த கிராமத்தில் வெறிநாய்களால் ஆடுகள் வேட்டையாடப்படும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கிராமப்பகுதியில் ஏராளமான வெறிநாய்கள் சுற்றித்திரிவதாகவும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெறிநாயகள் கடித்து 50 ஆடுகள் வரை பலியாகி உள்ளதாகவும் கிராம மக்கள் கூறினர். மேலும் அவர்கள் கூறுகையில், இந்த வெறிநாய்கள் அடிக்கடி கிராமத்திற்குள் புகுந்து தெருக்களில் நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோரை துரத்தி கடிக்க முயற்சித்து வருகின்றன. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது வெறிநாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மூதாட்டி உள்ளிட்ட வெறிநாய்களால் பலியான ஆடுகளின் உரிமையாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.