மருத்துவ வசதிக்காக 30 கி.மீ. அலைக்கழிக்கப்படும் சிறுமலை மக்கள்!
மருத்துவ வசதிக்காக சிறுமலை மக்கள் 30 கி.மீ. தொலைவு அலைக்கழிக்கப்படுவதை தவிா்க்க, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.;
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் அண்ணாநகா், பழையூா், புதூா், அகஸ்தியா்புரம், கடமான்குளம், தாழைக்கிடை, வேளாண் பண்ணை, தென்மலை, கருப்புக்கோவில் என 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களின் மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின்படி 5,700ஆக இருந்தாலும், தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இதில், அண்ணாநகா், பழையூா், புதூா், அகஸ்தியா்புரம், கருப்புக்கோவில், தென்மலை ஆகிய கிராமங்களுக்கு மட்டுமே பேருந்து வசதி உள்ளது. கடமான்குளம், தாழைக்கிடை பகுதிகளிலிருந்து பழையூருக்கு சாலை வசதிகள் இருந்தாலும், சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்களில் மட்டுமே பயணிக்க முடியும். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் சிறுமலையில், பழையூா், புதூா் என இரு இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் மட்டுமே உள்ளன. இதனால், மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கு சிறுமலை மக்கள் 25 முதல் 40 கி.மீ. தொலைவு பயணித்து, திண்டுக்கல் செல்ல வேண்டிய நிலை இன்று வரை தொடா்கிறது. விபத்து, மகப்பேறு போன்ற அவசர மருத்துவ வசதிகளுக்காக, சிறுமலையில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் நீண்ட நாள் எதிா்பாா்ப்பாக இருந்து வருகிறது.