வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 32 பேரிடம் மோசடி: 2 பேர் கைது

கைது;

Update: 2025-09-12 14:36 GMT
தஞ்சாவூர் மாவட்டத்தில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 32 பேரிடம்  ரூ. 2.50 கோடி மோசடி செய்த 2 பேரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜா வேலை தேடி கும்பகோணம் மோதிலால் தெருவில் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்த சென்னை வெட்டுவாகனி பகுதியைச் சேர்ந்த எம். சுதாகரை (41) தொடர்பு கொண்டார். அவர் கனடா நாட்டுக்கு வேலைக்கு அனுப்ப ரூ. 12 லட்சம் தேவைப்படும் என்றும், அதற்கு முன்பணமாக ரூ. 7.80 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் சுதாகர் கூறினார். இதை நம்பிய ராஜா வங்கி மூலம் சுதாகருக்கு பணபரிமாற்றம் செய்தார். ஆனால், 6 மாதங்களில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறிய சுதாகர் 2 ஆண்டுகளாகியும் அனுப்பவில்லை. இதையடுத்து, ராஜா கும்பகோணத்துக்கு சென்று பார்த்தபோது, அந்நிறுவனம் பூட்டிக் கிடந்ததுடன், சுதாகர் தலைமறைவாகிவிட்டதும் தெரிய வந்தது. இது குறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் ராஜா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் உத்தரவின் பேரில் இந்த வழக்கு தஞ்சாவூர் மாவட்டக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.  இப்பிரிவின் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் உதவி ஆய்வாளர் தென்னரசு உள்ளிட்டோர் கோவையில் தலைமறைவாக இருந்த சுதாகர், சென்னை அருகேயுள்ள கல்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்த வி. மகேஷ்பாபுவை (50) பிடித்து விசாரணை செய்தனர். இதில், 32 பேரிடம் இருவரும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.50 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து, சுதாகர், மகேஷ் பாபு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன், உதவி ஆய்வாளர் தென்னரசுவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

Similar News