விபத்தில் மனைவி உயிரிழந்த சோகத்தில் கணவர் தற்கொலை : தவிக்கும் 4குழந்தைகள்

கும்மிடிப்பூண்டி அருகே வாகன விபத்தில் மனைவி உயிரிழந்த துக்கத்தால் மனம் உடைந்த கணவர், மனைவியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடதிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2025-02-18 15:56 GMT
கும்மிடிப்பூண்டி அருகே வாகன விபத்தில் மனைவி உயிரிழந்த துக்கத்தால் மனம் உடைந்த கணவர், மனைவியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடதிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தைச்சேர்ந்த தனியார் தொழிற்சாலை கான்டிராக்டர் சுரேன் (வயது41). இவரது மனைவி தனலட்சுமி (33). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் அடுத்த சிறுபுழல்பேட்டையில் உள்ள தனியார் ஆங்கில பள்ளியில் இவரது கடைசி மகன் யு.கே.ஜி. படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 30-ஆம் தேதி (வியாழன்) மதியம் மகனுக்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக சுரேன் தனது மனைவி தனலட்சுமியுடன் மோட்டார் சைக்கிளில் சிறுபுழல்பேட்டை நோக்கி சென்றார். கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள சர்வீஸ் சாலை வழியே சிப்காட் பகுதிக்குள் மோட்டார் சைக்கிள் செல்ல முற்பட்டபோது, சாலை விபத்தில் தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் சுரேன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். அதற்கான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மனைவி தனலட்சுமி விபத்தில் இறந்த துக்கத்தால் மனம் உடைந்திருந்த சுரேன், கடந்த சில நாட்களாக வாழ்க்கையை வெறுத்து நடைபிணமாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், நேற்று (திங்கள்) காலை அதே கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு சென்று தனது மனைவி அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே விஷம் குடித்த சுரேன், அங்கேயே மயங்கி விழுந்து கிடந்தார். இதனையடுத்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேன் நேற்று (திங்கள்) மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தில் உள்ள அனைவரையும் சோகத்தில ஆழ்த்தி உள்ளது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News