அடுத்த ஆண்டு கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் தகவல்

அடுத்த ஆண்டு கரும்புக்கான ஆதார விலை, டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;

Update: 2025-03-19 17:40 GMT
அடுத்த ஆண்டு கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் தகவல்
  • whatsapp icon
சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 19) நடைபெற்ற விவாதத்தின்போது, அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் “கரும்புக்கான ஆதார விலை டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தீர்கள். ஆட்சிக்கு 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்போது இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். அப்போது, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியது: “திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு புதிதாக 1.80 லட்சம் இலவச மின்இணைப்பு வழங்கப்பட்டதால் மாநிலத்தில் பயிர் சாகுபடி பரப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இயற்கை இடர்பாடுகளை போக்கும் வகையில் விவசாயிகளுக்கு ரூ.1642 கோடி அளவுக்கு நிவாரண நிதி வழங்கப்ப்பட்டுள்ளது. கரும்புக்கான ஆதார விலை எப்போது ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அதிமுக உறுப்பினர் கேட்கிறார். திமுக அரசுதான் கரும்புக்கான ஆதார விலையை ரூ.3500 ஆக உயர்த்தி வழங்கியது. வரும் ஆண்டில் கரும்புக்கான ஆதார விலை ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்” என்றார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு ஒரே ஆண்டில் இரண்டு முறை நிவாரண உதவிகள் வழங்கினோம். வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசு. கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பதைத்தான் உறுப்பினர் சுட்டிக்காட்டுகிறார்” என்றார். தொடர்ந்து அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், “புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்” என்றார். அதற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன், “காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை பிரகடனப்படுத்தியவர் கருணாநிதி. அத்திட்டத்தை அதிமுக ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டு இறுதி ஆண்டுதான் கையில் எடுத்தீர்கள். அதற்கு ஆங்காங்கே துண்டு துண்டாக கால்வாய் வெட்டினீர்கள். இது மிகப் பெரிய குற்றம். நதி நீர் இணைப்பு திட்டம் என்றால் தொடர்ச்சியாக கால்வாய் வெட்டுவார்கள். ஆனால், துண்டு துண்டாக கால்வாய் வெட்டிய அறிவாளிகள் நீங்கள்தான்” என்றார்.

Similar News