
கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நட்டாலம் ஊராட்சியில் ஸ்டார் ஜங்ஷன் என்ற பகுதி உள்ளது. அங்கே கல்குவாரிக்கு செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை திறக்க போவதாக தகவல் பரவியது. மேலும் அந்தப் பகுதியில் இருந்த ஒரு பர்னிச்சர் கடையை ஒரே நாளில் காலி செய்துவிட்டு அந்த கடையின் உள்பக்கமாக பூட்டி கட்டுமான பணி நடந்து வந்துள்ளது. இதனை அடுத்து முள்ளங்கினாவிளை, நட்டாலம் ஊராட்சி பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். பெருமளவில் அங்கு மக்கள் திரண்டனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங், நட்டாலம் ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் மற்றும் அனைத்து கட்சியினர் திரண்டனர். மேலும் டாஸ்மாக் கடை திறப்பதற்குரிய இடத்தில் உள்ள கடையின் முன்புறம் நின்று இரவிலும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்கள் எந்த காரணத்தை கொண்டும் டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்க மாட்டோம். ஏற்கனவே அரை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது என கூறினார்கள். மேலும் பொதுமக்கள் நேற்று அந்த கடை முன்பு காவல் இருந்தனர். இதனை அடுத்து மதுபானம் கொண்டு வந்த வண்டி அங்க நிறுத்தாமல் ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். இதனை அடுத்து அனைத்து கட்சி சார்பில் நட்டாலம் ஊராட்சி செயலாளர் இடம் எந்த காரணத்தை கொண்டும் டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்க கூடாது என மனு அளித்தனர்.