கேரளாவிற்கு கடத்தப்பட்ட 4700 கிலோ வெடி மருந்து பொருட்கள் பறிமுதல்
குமாரபாளையத்தில் சேலத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்திய சுமார் 4,700 கிலோ வெடி மருந்து பொருட்கள் பறிமுதல் 7 பேர் கைது;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஆவாரங்காடு பேருந்து நிறுத்தத்தில் கடந்த 28 ஆம் தேதி மாலை குமாரபாளையம் ஆய்வாளர் தவமணி போலீசாருடன் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த பொழுது அவ்வழியே வேகமாக வந்த ஈச்சர் லாரி ஒன்றை நிறுத்தி போலீசார் ஆவணங்களை கேட்டனர். ஆவணங்களை தருவது போல் வந்த லாரியின் ஓட்டுனர் போலீசார் இடம் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து போலீசார் வாகனத்தை ஆய்வு செய்த பொழுது ஈச்சர் லாரியில் தக்காளி கூடைகளுக்கு இடையே சுமார் 4,700 கிலோ எடை கொண்ட ஜலட்டின் குச்சிகள் மற்றும் வெடி பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வெடிமருந்து துறை நிபுணர்களுக்கு தகவல் அளித்து வரவழைத்தனர். பின்னர் அவற்றை பாதுகாப்பாக பரமத்தி வேலூர் அருகே உள்ள இருகூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் வெடி மருந்து கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. பின்னர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு கொண்ட பொழுது எவ்வித தகவல்களும் கிடைக்காத பட்சத்தில், லாரியின் உரிமையாளர் ஈரோடு மாவட்டம் சித்தோடு சேர்ந்த பார்த்திபனை போலீசார் தேடி பிடித்தனர். இதனை அடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட பொழுது, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களை சார்ந்த கிணறு வெட்டும் தொழிலாளர்கள் மற்றும் வெடி மருந்து விற்பனையாளர் ஆகியோரிடம் வெடி மருந்து பொருட்களை பெற்றுக் கொண்டு கேரள மாநிலத்திற்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பதை ஒத்துக் கொண்டார். இதனை அடுத்து பார்த்திபனிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட பொழுது அவர் வெடி மருந்து பொருட்களைப் பெற்று தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி சேலம் மாவட்ட பகுதிகளைச் சார்ந்த வெடி மருந்து ஒப்பந்ததாரர்கள் கிருபாகரன், ராஜேந்திரன், சுருளிராஜன், அப்துல் லத்தீப், பழனிச்சாமி, ராமலிங்கம் ஆகியோரை திருச்செங்கோடு காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட குமாரபாளையம் போலீசார் லாரியை பறிமுதல் செய்ததுடன் குற்றவாளிகள் 7 நபர்களையும் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர் செய்து அவரது உத்தரவின் பேரில் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர் குமாரபாளையம் பகுதியில் சுமார் 4700 கிலோ வெடி மருந்து பொருட்களை கடத்த முயற்சி செய்த நபர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.