மீன்சுருட்டி அருகே மாதாபுரத்தில் ஜல்லிக்கட்டு 482 காளைகள் பங்கேற்றன 26 வீரர்கள் காயம்

மீன்சுருட்டி அருகே மாதாபுரத்தில் ஜல்லிக்கட்டு 482 காளைகள் பங்கேற்றன 26 வீரர்கள் காயமடைந்தனர்.;

Update: 2025-05-30 12:56 GMT
அரியலூர்,மே.30 - அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மாதாபுரம் கிராமத்தில் புனித லூர்து அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை ஏற்றனர். பின்னர் விழாவில் ஜல்லிக்கட்டை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்.உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஷீஜா, ஜெயங்கொண்டம் தாசில்தார் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முதலாவதாக கோவில் காளை விடப்பட்டு பின்னர் அடுத்தடுத்து காளைகள் விடப்பட்டன. இப்போட்டியில் மதுரை, தஞ்சாவூர்,கரூர், கடலூர், திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், புதுக்கோட்டை, கரூர் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 482 காளைகளும்,207 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டுக்கொண்டு வீரர்கள் அடக்கினர். இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்க பணம், சில்வர் அண்டா, சைக்கிள்,பீரோ மற்றும் ட்ரெஸ்ஸிங் டேபிள் என ரூ10 லட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தழகு தலைமையில்,ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ரவி சக்கரவர்த்தி, மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போட்டியில் காயமடைந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. முன்னதாக போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகே போட்டியில் அனுமதிக்கப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியை காண்பதற்காக ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திற்கு உட்பட்ட சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.இவற்றில் மாடுபிடி வீரர் 10 பேரும், பார்வையாளர்கள் 16 பேரும் காயம் அடைந்தனர்.இவர்கள் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் முதலுதவி செய்யப்பட்டு பின்னர் 3 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.போட்டிக்கான ஏற்பாடுகளை புனித லூர்து அன்னை ஆலய ஜல்லிக்கட்டு விழா கமிட்டி குழுவினர் செய்து இருந்தனர்.

Similar News