பல்லடத்தில் காரை சேதப்படுத்தி தாய் மகனை தாக்கிய 5 பேர் கைது
பல்லடத்தில் காரை சேதப்படுத்தி தாய் மகனை தாக்கிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்;
பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பால் அருள்தாஸ் (வயது 57). நேற்று முன்தினம் இவர், வீட்டில் இருந்து திருப்பூர் செல்வதற்காக மனைவி மங்கையர்க்கரசி, மகன் அபினேஷ் ஆகியோருடன் காரில் புறப்பட்டார். காரை அபினேஷ் ஓட்டினார். கார், இவரது வீட்டிலிருந்து அதே தெருவில் வந்தது. அப்போது அங்கு ஏற்கனவே ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நடு ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் அருகே சிலர் பேசிக் கொண்டிருந்தனர். அபினேஷ், அவர்களிடம் வழி விடுமாறு கூறியதாக கூறப்படுகிறது. அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அவினேஷ் மற்றும் மங்கையர்க்கரசி தாக்கப்பட்டனர். பின்னர் இரும்பு கம்பியால் காரின் முன் பகுதியை சேதப்படுத்தி, கண்ணாடிகளையும் உடைத்தனர். இதில் காயம் அடைந்த இருவரும், திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் (45), பிரபு (32), பிரகாஷ் (35), அங்கு ராஜ் (36), முத்துக்குமார் (32) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.