காங்கேயம் சிவன்மலை அருகே பட்டியில் இருந்த ஆடுகளை நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி. 10க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயம்.ரூ 2 லட்சம் விவசாயிக்கு நஷ்டம் 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவன்மலை அருகே ராமபட்டினத்தில் ரத்தினசாமி என்பவர் தோட்டத்தில் பட்டியலிருந்த ஆடுகளை நாய்கள் கடித்து குதறியதில் 5 ஆடுகள் பலி மேலும் 10க்கு மேற்பட்ட ஆடுகள் படுகாயம். இறந்த மற்றும் படுகாயம் அடைந்த ஆடுகளின் மதிப்பு சுமார் 2 லட்சம் இருக்கும் என விவசாயி தெரிவித்தார்.;

Update: 2025-01-20 03:03 GMT
காங்கேயம் சிவன்மலை அருகே உள்ளது ராமபட்டினம். இங்கு ரத்தினசாமி (65) என்பவர் விவசாயம் செய்து கொண்டு ஆடு, மாடு கால்நடைகளை வளர்த்து வருமானம் ஈட்டி வருகின்றார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று மாலை ஆடுகளை தோட்டத்தில் மேய விட்டு பின்னர் மாலை நேரத்தில் தோட்டத்தின் வீட்டின் அருகாமையில் உள்ள தொண்டுப்பட்டி அமைத்து அதில் ஆடுகளை அடைத்து வைத்து விட்டு சென்று விட்டார். பின்னர் இன்று காலை மீண்டும் ஆடுகளை தோட்டத்திற்கு மேய அழைத்துச் செல்ல வந்து பார்த்தபோது ஆட்டுப்பட்டிக்குள் குட்டிகள் உட்பட 5 ஆடுகள் கொடூரமாக நாய்கள் கடித்து குதறி இருந்து கிடந்தது. மேலும் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறியும் உள்ளது. அதிலும் குறிப்பாக சில ஆடுகளுக்கு காதுகளே இல்லாமலும் படுகாயம் அடைந்துள்ளது. படுகாயம் அடைந்த ஆடுகளில் சில ஆடுகளை காப்பாற்ற முடியாது என விவசாயி வேதனையுடன் தெரிவிக்கின்றார். மேலும் இறந்த 5 ஆடுகள் படுகாயம் அடைந்த 10க்கு மேற்பட்ட ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இழப்பு எனவும் தெரிவிக்கின்றார். மேலும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. படுகாயம் அடைந்த காயத்தில் இருக்கும் தாய் ஆட்டிடம் குட்டியாடு பால் குடிக்கின்றது காதுகளே இல்லாமல் காயத்தின் வலியை பொறுத்துக் கொண்டு தாய் ஆடு குட்டிக்கு பால் கொடுக்கும் சம்பவத்தை பார்த்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பி.ஏ.பி.வெள்ளகோவில் காங்கேயம் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் இறந்த ஆடுகளுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் எனவும் பின்னரே ஆடுகளை பிரேதபரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 100க்கு மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்ட விவசாயி ரத்தினசாமி தோட்டத்தில் உறுதுணையாக உள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வந்த வண்ணம் உள்ளனர்.  இதனால் ராமபட்டினம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News