லாரி மோதியதில் 5 வாகனங்கள் சேதம், 5 பேர் படுகாயம்

குமாரபாளையம் அருகே லாரி மோதியதில் 5 வாகனங்கள் சேதமானதுடன் 5 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2024-10-03 13:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலத்தில் இருந்து ஜல்லி பாரங்கள் ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டத்திற்கு சென்ற தனியார் லாரியினை அதன் ஓட்டுனர் சாமிதுரை, 42, ஓட்டிக்கொண்டு வரும் பொழுது, குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியான தட்டான் குட்டை பகுதியில், நேற்று காலை 06:45 மணியளவில் எதிர்பாராத விதமாக பிரேக் பிடிக்காததால், முன்னால் சென்று கொண்டிருந்த காரின் மீது மோதியதில், அடுத்தடுத்து முன்னாள் சென்ற 5 வாகனங்கள் மீது மோதி நின்றது. சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், ஈரோடு மாவட்டம் கூடுதுறைக்கு வந்தனர். இதில் குமார், 60, ஜெயலட்சுமி, 55, எழிலரசி, 42, ரமேஷ், 44, குணசேகரன், 38, ஆகிய 5 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும் கோவையில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள சேலத்திலிருந்து இன்டர்நேஷனல் பாரா த்ரோபால் விளையாட்டு வீரர்கள் ஏழு பேர் கொண்ட குழுவினர் சென்ற வாகனமும் விபத்தில் சிக்கியது. இதில் இன்டர்நேஷனல் த்ரோ பால் விளையாட்டு வீரர்கள் மனோஜ் குமார், தமிழரசன் ஆகியோர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தின் காரணமாக சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்து ஏற்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். போக்குவரத்து பாதிப்பால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுனர் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த சாமிதுரை, 42, என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News