நாமக்கல்லில் 510 வது நாளாக சிப்காட் எதிர்ப்பு குழுவினர் ஆர்பாட்டம்,ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.
பேய் அரசாண்டால் பிணந்திண்ணி கழுகுகள் வலம் வரும் என தமிழக அரசை கடுமையாக சாடல்;
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டத்திற்குட்பட்ட வளையபட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டி ஆகிய 4 ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து அதற்கு உண்டான 750 ஏக்கர்களை கையகப்படுத்த மாவட்ட சிப்காட் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, பரளி, அரூர் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 750 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களுடன் 170 ஏக்கர் விவசாய நிலத்தையும் கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் வேலை செய்து வருகின்றன.இதில் பெரும்பாலான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதியில் உள்ள விவசாயிகள், சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் குற்றம் சாட்டி சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த சூழலில், 510-வது நாளாக சிப்காட் எதிர்ப்பு குழுவினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெருந்துறை சிப்காட் பகுதியில் பாதிக்கப்பட்ட நீரினை எடுத்து வந்து தங்களது பகுதியிலும் சிப்காட் அமைத்தால் இவ்வாறு நீர் மாசடையும் எனக்கூறி அந்த நீரை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய திமுக முன்னாள் நிர்வாகி பழனிச்சாமி என்பவர், காலம் காலமாக தான் திமுகவில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வந்த நிலையில், தற்போது சிப்காட் திட்டத்தால் அந்த பதவிகளை திறந்து சிப்காட் எதிர்ப்பு குழுவில் இணைந்ததாகவும் மாவட்ட ஆட்சியர் முன்பு சுமார் 500க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட ஆட்சியர் தங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை எனவும் தனிநபர் ஒருவர் பயன்பெற சிப்காட் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் பேய் அரசாண்டால் பிணந்திண்ணி கழுகுகள் வலம் வரும் என்பதற்கு தற்போது நடைபெறும் திமுக அரசே சான்று எனவும் கடுமையாக சாடினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, சிப்காட் எதிர்ப்பு குழுவை சேர்ந்த ரவீந்திரன், முன்னாள் நாமக்கல் ஆட்சியர் உமா அவர்கள் சிப்காட் அமைய உள்ள இடத்தில் எவ்வித நீர்நிலைகளும் இல்லை தரிசு நிலம் மட்டுமே உள்ளதாக வேண்டுமென்றே பொய்யான அறிக்கையை தமிழக அரசுக்கு தாக்கல் செய்துள்ளார். அவர் யாருடைய நிர்பந்தத்தின் பெயரில் அவர் அறிக்கையை தாக்கல் செய்தார் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்திட வேண்டும் என மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.