திருவள்ளுவர் தினத்தன்று கடைகள் மூடியபோதும் பொங்கல் அன்று ரூ.724 கோடிக்கு மது விற்பனை: கடந்த ஆண்டை விட அதிகம்
தமிழகத்தில் பொங்கல் விழாவையொட்டி ரூ.725.56 கோடிக்கு மது விற்பனை நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.46.91 கோடி அதிகமாகும்.
பொங்கல் விழாவையொட்டி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். பொங்கலுக்கு மறுநாள் திருவள்ளுவர் தினம் என்பதால், டாஸ்மாக் கடைகள் அன்றைய தினம் மூடப்படும். இந்நிலையில், இந்தாண்டு பொங்கல் விழாவுக்கு பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடினர். இந்தாண்டு பொங்கல் விழா அன்று, தமிழகம் முழுவதும் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. மேலும், திருவள்ளுவர் தினத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால், அதற்கு முந்தைய நாளே பலரும், அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி வைத்துக் கொண்டனர். ஆனாலும், பல இடங்களில், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்நிலையில், இந்தாண்டு பொங்கல் விழாவுக்கு ஜன.13, 14, 16 ஆகிய நாட்களில் தமிழகம் முழுவதும் ரூ.725.56 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் விழா காலத்தில் ரூ.678.65 கோடி மது விற்பனை நடைபெற்றது. அந்தவகையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.46.91 கோடிக்கு அதிகமான மது விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.