பெரம்பலூர் தனலட்சுமிசீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 79வதுசுதந்திர தின விழா

மனதின் சுதந்திரமே உண்மையான சுதந்திரம்’ என்ற உணர்வோடு செயல்படுங்கள். நீங்கள் அனைவரும் சாதி, இன, மொழிபாகுபாடு இன்றி சகோதர மனப்பான்மையோடு ஒற்றுமையுடன் பழகவேண்டும்.;

Update: 2025-08-15 17:30 GMT
பெரம்பலூர் தனலட்சுமிசீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 79வதுசுதந்திர தின விழா கொண்டாட்டம் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 79 - வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15-ஆம் தேதி தேதி வெள்ளிக்கிழமை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர்அ. சீனிவாசன் தலைமை வகித்து, தேசியக்கொடியை ஏற்றிவைத்து தலைமையுரையாற்றினார் அப்பொழுது பேசியதாவது : பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் சார்பாக கொண்டாடப்படும் 79வது சுதந்திர தின விழாவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சிஅடைகின்றேன். இன்று நம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சுதந்திர தின விழாவினைக் கொண்டாட வருகை புரிந்திருக்கும் அறக்கட்டளை உறுப்பினர்கள், மருத்துவர்கள், முதல்வர்கள், துணைமுதல்வர்கள், புலமுதன்மையர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவச் செல்வங்களுக்கும் இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதனும் தங்களின் திறமையை எவ்விததடையும் இல்லாமல் வெளிப்படுத்துவதற்கு அச்சாணியாக நம் கல்வி நிறுவனம் விளங்குகிறது. இன்று சுதந்திரத்தின் அருமையை உணர்த்தும் நாள் மட்டுமல்ல, அதை பாதுகாக்கும் பொறுப்பையும், நினைவூட்டும் நாள் என்பதையும் உணர வேண்டும். இன்றைய உலகில் பலநாடுகளில் இன்றும் போர் நடைபெறுவதால், மக்கள் உயிரிழக்கிறார்கள், பொருளாதாரம் சிதறுகிறது, கல்வி பாதிக்கிறது. இதற்கு சான்றாக, உக்ரைன் – ரஷ்யா போரில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இன்று இரவு நாம் உயிரோடு இருப்போமா! என்னும் அச்சத்தோடு வாழ்ந்து வருவதை நம் கண்முன்னே காண்கிறோம். ஆனால், இன்று நாம் இங்கு ஒன்று கூடி, சுதந்திரகாற்றை ஒன்றாக சுவாசிக்கிறோம் என்றால், நம் தேசத்தின் பெருமையும், தியாகிகளின் இரத்தத் துளிகளால் எழுதிய வரலாற்றையும் நினைவு கூறும் பொன் நாளாகும். இந்தநாளில் சுதந்திரத்தை நமக்கு அளித்த போராட்ட வீரர்களின் தியாகம் மற்றும் நம் தேசத்தின் முன்னேற்றம், ஒற்றுமையைச் சமாதானத்தின் வழியில் அழைத்துச் செல்லஅனைவரும் இந்நாளில் ஒன்றாகக் கூடியுள்ளோம் என்பதை நினைக்கும் போது பெருமைக் கொள்கிறேன். என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்ற வாக்கிற்கு இணங்க,நம் பல்கலைக்கழகத்தில் கலை அறிவியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைகல்லூரி, சட்டக் கல்லூரி கல்வியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, மருந்தியல் கல்லூரி, போன்ற பலகல்விநிறுவனங்களையும் நிறுவி கிராமப்புற மாணவர்களும் கல்வி கற்று பட்டம் பெறவழிவகை செய்யப்பட்டுள்ளது. நமது நிறுவனத்தில் அதிநவீனவசதியுடன் கூடிய மூன்று மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் துவங்கப்பட்டு சிறப்பு வாய்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவர்களைக் கொண்டு ஏழை எளிய மக்களும் பயன் பெறும் வகையில் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. பாரதத்தின் சுதந்திரத் தினத்தை முன்னிட்டு மக்களின் பரிபூரண ஆரோக்கிய வாழ்விற்கு ஆகஸ்ட் 1 முதல் 15 வரை அனைத்து விதமான அறுவைசிகிச்சைகள், இரத்தப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகள் மட்டும் அல்லாது மகளிர் சட்டம் படித்துதிறனாய்வு சிந்தனைமற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களைப் பெற்று, அநீதிகளை எதிர்த்துப் போராடவும், உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இம்மாவட்டத்தில் இக்கல்வியாண்டில் முதல் முதலாக மகளிர் சட்டக் கல்லூரியை உருவாக்கி சட்டத்துறையில் மகளிர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், சட்டம் படித்தால் மகளிர் வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும், சட்டஆலோசகர்களாகவும் பணியாற்றவேண்டும் என்பதற்காகவே நிறுவப்பட்டுள்ளது. கிராமப்புறப் பெண்களும் சட்டத்தை உணர்ந்து இக்கல்லூரியில் பயின்று பயனடைய வேண்டும். ‘மனதின் சுதந்திரமே உண்மையான சுதந்திரம்’ என்ற உணர்வோடு செயல்படுங்கள். நீங்கள் அனைவரும் சாதி, இன, மொழிபாகுபாடு இன்றி சகோதர மனப்பான்மையோடு ஒற்றுமையுடன் பழகவேண்டும். உலகநாடுகள் அனைத்தும் வியக்கக்கூடிய அளவிற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தை நாம் பெற்றுள்ளோம். மக்களாட்சி மாண்பினையும், அதன் மதிப்பினையும் உயர்த்தும் வண்ணம் நம் அரசியல் அமைப்புசட்டம் திகழ்கிறது. நீங்கள் தான் நாட்டின் எதிர்காலம். உங்களின் அறிவும், உழைப்பும், ஒற்றுமையும் தான் நாளைய இந்தியாவை வலிமையாக்கும். எதிர்காலத்தில், நீங்கள் ஒரு சிறந்த மருத்துவர், விஞ்ஞானி, ஆசிரியர், விவசாய வல்லுநர், பொறியாளர் என எந்த துறையில் சிறந்துவிளங்கினாலும், ‘நான்’ என்ற எண்ணம் வேண்டாம் –‘நம் நாடு’ என்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும். இந்நாளில் நம்முடைய தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நாம் உயர்ந்த இலக்குகளை நோக்கிச் செல்லவேண்டும். கல்வி என்பது வெறும் பட்டம் வாங்கும் பயணம் அல்ல, அது நம் சமூகத்தின் மேம்பாட்டுக்கான பொறுப்பு. தேசத்தையே மாற்றும் சக்தி கல்விக்கு உள்ளது. என்பதை உணர்ந்து, உங்களை போல இளைய தலைமுறையினரும் நாட்டின் வளர்ச்சியில் பங்களிக்க வேண்டும். ‘கற்கை நன்றே கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கைநன்றே!’ என்னும் வரிகளுக்கு இணங்க, பெற்ற சுதந்திரத்தை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டியது மாணவர்களாகிய உங்களின் கடமை, என்பதை உணர்ந்து கல்வி பயிலவேண்டும். அக்கல்வியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அதை நல்ல முறையில் நடைமுறைபடுத்த வேண்டும். கல்வியால் மட்டுமே வளரும் நாடான நம் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க முடியும். என்று சுதந்திர தின உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் நமது பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தேசப்பற்றை பறைசாற்றும் வகையில் மாணவ மாணவியரின் சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் மாவட்ட , மாநில , தேசிய அளவில், கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைகளை புரிந்த மாணவ மாணவிகள் அய்யா அவர்களை சந்தித்து ஆசி பெற்றனர். அப்பொழுது அய்யா அவர்கள் தன்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் அவர்களுக்கு தெரிவித்து பரிசுகள் வழங்கினார். இந்த விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வருங்கால வேந்தர் திரு நிர்மல் கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் நீவாணி மற்றும் நகுலன், தனலட்சுமி சீனிவாசன் கல்விநிறுவங்களின் செயலர் திரு நீலராஜ், தலைமை நிதி அதிகாரி திரு ராஜசேகர் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முதன்மையர்கள், முதல்வர்கள், துணை முதல்வர்கள், புலமுதல்வர்கள், தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட 7000 க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.

Similar News