தாயுமானவர் திட்டம் மூலம் சேலம் மாவட்டத்தில் 92 ஆயிரத்து 998 ரேஷன் கார்டுதாரர்கள் பயன் பெற உள்ளனர்
அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தகவல்;
சேலம் கருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடைக்குட்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம் பொருட்கள் வினியோகிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலை வகித்தார். அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தலைமை தாங்கி முதியோர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- சேலம் மாவட்டத்தில் 1,265 முழு நேரம் மற்றும் 478 பகுதி நேரம் என மொத்தம் 1,743 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம் சேலம் மாவட்டத்தில் 92 ஆயிரத்து 998 ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த திட்டம் மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பயன் பெறுவோரின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் முதல் இடம் பெற்றுள்ளது. மின்னணு எடைத்தராசு உள்பட உபகரணங்களுடன் ரேஷன் பொருட்கள் தகுதி உள்ள பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் கடை விற்பனையாளர்கள் வினியோகிக்க உள்ளனர். ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். பொருட்கள் வினியோகிக்க 1,489 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 70 ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒரு வண்டி மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்படும். மலைப்பகுதிகளில் 50 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், கிராம பகுதிகளில் 60 கார்டுதாரர்களுக்கும் தலா ஒரு வண்டி மூலம் பொருட்கள் வினியோகிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.