அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு Virtual Reality
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ARTA பவுண்டேஷன் சார்பில் FUTURE SCHOOLS என்ற நோக்கில் அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு Virtual Reality
சிவகங்கை மாவட்டம், மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கத்தில், இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், ARTA பவுண்டேஷன் சார்பில் FUTURE SCHOOLS என்ற நோக்கில், மொத்தம் 60 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு Virtual Reality & Augmented Reality கருவிகளை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கினார். பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறையில் மாணாக்கர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில், நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப மக்களின் வாழ்வாதார நடைமுறைகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. அதேபோன்று, மாணாக்கர்களின் கற்றல் திறனை மேம்படுத்திடும் பொருட்டும் மற்றும் கற்பிக்கும் நடைமுறையை நவீன படுத்திடும் பொருட்டும், தமிழக அரசால் Smart Classes மற்றும் Hi-Tech Lab போன்றவைகள் அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டு, தனியார் பள்ளிகளுக்கு மேலாக அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, மாணாக்கர்களிடையே கற்றலுக்கான ஆர்வமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதில், அரசுடன் இணைந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் பல்வேறு பணிகளும் சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தவகையில், மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பின் கீழ் ARTA பவுண்டேஷன் சார்பில் நமது மாவட்டத்தில் முதல் பணியாக பழமலை நகர் பகுதியிலுள்ள உண்டு உறைவிட பள்ளியில் வர்ணங்கள் பூசும் பணியினையும், அதனைத்தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 04 பள்ளிகளில் மாணாக்கர்களை ஊக்கப்படுத்திடும் பொருட்டு, அவர்களை கவரும் வண்ணம், கல்வி மற்றும் பொதுஅறிவு ஆகியவைகள் தொடர்பான சிறப்பான ஓவியங்கள் கொண்ட வர்ணம் பூசும் பணியினை சிறப்பாக மேற்கொண்டுள்ளனர். கடந்தாண்டை போலவே, இந்தாண்டும் குறைந்தது 10 பள்ளிகளில் மேற்கண்டவாறு வர்ணம் பூசும் பணிகளை மேற்கொள்ள ARTA பவுண்டேஷன் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் தங்களைப் பார்த்து மனமகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும், தன்னம்பிக்கையுடனும் நாள் முழுவதும் செயல்படும் பொருட்டு, பள்ளியினுள் முகம் பார்க்கும் கண்ணாடி பொறுத்தும் பணியும் பழமலை நகர் பகுதியிலுள்ள உண்டு உறைவிட பள்ளியில் மேற்கொள்ளப்பட்டது. இதனை மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் மராமத்து பணிகளுடன் கண்ணாடிகள் பொறுத்தும் பணியினையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து, மாணாக்கர்களுக்கு தற்போது கற்பிக்கப்படும் பாடமுறைகளை நவீன படுத்திடும் பொருட்டு, இயற்பியல், வேதியியல், புவியியல் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட பாடமுறைகளின் செயல்வடிவம் மற்றும் தன்மையை உணர்ந்து, முழு புரிதலுடன் எளிதில் படிப்பதற்கு ஏதுவாக, அரசால் ஏற்படுத்தப்பட்டு நடைமுறையிலுள்ள Smart Classes மற்றும் Hi-Tech Lab போன்றவைகளுடன், Virtual Reality & Augmented Reality கருவிகளை வழங்குவதற்கு, மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பின் படி ARTA பவுண்டேஷன் சார்பில் FUTURE SCHOOLS என்ற நோக்கில், இன்றைய தினம் மாவட்டதின் பல்வேறு பகுதிகளிலுள்ள 60 பள்ளிகளுக்கு Virtual Reality & Augmented Reality கருவிகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இக்கருவிகளை அந்தந்த பள்ளிகளில் ஸ்மார்ட் போன் வாயிலாக அதற்கான App பயன்படுத்தும் முறைகள் குறித்து, ARTA பவுண்டேஷன் சார்பில் விரிவாக தற்போது எடுத்துரைத்துள்ளனர். இதுதவிர, இதற்கான பயிற்சி வகுப்புக்களும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சிறந்த மாணாக்கர்களை உருவாக்குவது ஒவ்வொரு ஆசிரியர்களின் கடமையாகும். அதனை அடிப்படையாக கொண்டு, அவர்களின் திறன்களை வெளிக்கொணர்ந்து, அவர்களின் திறன்களுக்கேற்ப சிறந்த நிலையை அடையச் செய்ய வேண்டும். மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்கி வருகிறது. அனைவரின் பங்களிப்புடன் முதல் இடத்தினை எட்டுவதற்கான இலக்கினை நோக்கி, அதற்கான முழு ஈடுபாடுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து, ARTA பவுண்டேசன் நிறுவனர் மகேஷ்வர், மாவட்ட கல்வி அலுவலர்கள், ARTA பவுண்டேசன் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.