தஞ்சை அருகே 1 டன் ரேஷன் அரிசி கடத்தல்: சரக்கு வேனுடன் வாலிபர் கைது !
தஞ்சை அருகே 1 டன் ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-04-01 05:54 GMT
தஞ்சை அருகே 1 டன் ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர். தஞ்சை அருகே மேலவஸ்தாசாவடி, ராவுசாப்பட்டி பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.தஞ்சை அருகே மேலவஸ்தாசாவடி அருகே ராவுசாப்பட்டி பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை மறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த சரக்கு வேனில் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சரக்கு வேனை ஓட்டி வந்த தஞ்சை நேருஜி நகர் தென்கரையை சேர்ந்த வினோத் என்ற நவநீதகிருஷ்ணனை (35) பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ராவுசாப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, இட்லி மாவு அரைப்பதற்காகவும், கால்நடை தீவனத்துக்காகவும் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து சரக்கு வேனையும், அதில் இருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 20 மூட்டை ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வினோத் என்ற நவநீதகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.