10 ரூபாய் நாணயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் - ஆட்சியர்
அனைத்து தரப்பினரும் 10 ரூபாய் நாணயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் பிருந்தாதேவி அறிவுறுத்தி உள்ளார்.
10 ரூபாய் நாணயங்களின் பயன்பாடுகள் தொடர்பாக வங்கியாளர்கள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் டாக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 10 ரூபாய் நாணயங்கள் அனைத்து வங்கிகளிலும் ஏற்றுக்கொள்ளப்படும் என ரிசர்வ் வங்கியால் ஏற்கனவே பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற தவறான எண்ணம் இருப்பதால் சில இடங்களில் நாணயங்கள் வாங்கப்படுவதில்லை என்ற புகார்கள் வருகின்றன.
எனவே வங்கியாளர்கள் பொதுமக்கள் வழங்கும் 10 ரூபாய் நாணயங்கள் எப்போதும் பெறப்படும், 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று வங்கி முன்பு அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் பஸ் கண்டக்டர்கள் பொதுமக்களிடம் இருந்து 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். இதை அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் கண்காணிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி சார்பில் கடைகள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும்.
பொதுமக்கள், பஸ் கண்டக்டர்கள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் 10 ரூபாய் நாணயங்களை தயக்கமின்றி ஏற்று கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் டாக்டர் பிருந்தாதேவி கூறினார். கூட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சிவலிங்கம், முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்