100 நாள் வேலைக்கு மரக்கன்றுகள் பிடுங்கிய பெண்மணி பாம்பு கடித்து பலி
மயிலாடுதுறை அருகே நீடூரில் 100 நாள் வேலைக்கு மரக்கன்றுகள் தராமல் தொழிலாளர்களை கன்றுகளை பிடுங்கிவர சொல்லும் பொழுது பாம்பு கடித்துப் பெண் தொழிலாளி பலி உறவினர்கள் சாலை மறியல் அதிகாரிகள் பொய் கூறி சமாளிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்திற்கு உட்பட்ட நீடூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மரக்கன்றுகள் நடும்பணி நடைபெற்று வந்தது. இரண்டு நாட்களாக பள்ளியில் குழி பறித்து மரக்கன்றுகள் நடும் பணியில் 70க்கும் மேற்பட்ட 100 நாள் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று பள்ளியில் நடுவதற்கு மரக்கன்றுகள் வழங்காமல் 100 நாள் வேலை செய்யும் பணியாளர்களை வரும்போது மரக்கன்றுகளை பிடுங்கிவர சொன்னதன் பேரில் காலையில் 100நாள் பணியாளர்கள் சாலை ஓரங்களில் இருந்த வேம்பு, புங்கை உள்ளிட்ட மரக்கன்றுகளை பிடுங்கி பள்ளியில் நடுவதற்கு எடுத்து சென்றுள்ளனர். மரக்கன்று பிடுங்கிய உடையார் கட்டளையை சேர்ந்த கலைமணி(55) என்ற பெண்மணியை காணாமல் தேடிய சக பணியாளர்கள் கலைமணி வாயில் நுரைதள்ளி மயங்கி கீழே விழுந்து கிடந்ததை கண்டு அவரை ஆட்டோவில் உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். கலைமணி கொடிய விஷமுள்ள பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கடித்து உயிரிழந்துவிட்டதாகவும் பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும் என்று ம கூறிய கிராமமக்கள் கலைமணி உயிரிழப்பிற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையிலிருந்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் யாரும் வராதததை கண்டித்தும் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் மருத்துவமனை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு வந்த மயிலாடுதுறை கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர் பிரேத பரிசோதனை அறிக்கையில் கலைமணி பாம்பு கடித்து இறந்திருந்தால் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் மரக்கன்றுகளை 100 நாள் பணியாளர்களை கொண்டுவரசொல்லவில்லை என்று தெரிவித்து சமாளித்தார். 100 நாள் வேலை செய்து பணியாளர்கள் எதிர்த்து பதில் கூறியதும் அவர் அமைதியாகிவிட்டார்.