1,050 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: இளைஞா் கைது

திருச்சியில் முறைகேடாக பதுக்கி வைத்திருந்த 1,050 கிலோ ரேசன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக ஒருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Update: 2025-01-08 01:24 GMT
திருச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா் சியாமளாதேவி உத்தரவின்பேரில், துணை கண்காணிப்பாளா் வின்சென்ட், ஆய்வாளா், உதவி ஆய்வாளா் மற்றும் போலீஸாா் கொண்ட தனிப்படையினா் அரியமங்கலம், திருவெறும்பூா் மற்றும் துவாக்குடி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அரியமங்கலம், அம்மாக்குளம், வடக்கு உக்கடை, தெற்கு உக்கடை, பால் பண்ணை பகுதிகளில் ரோந்துப்பணியின்போது, அரியமங்கலம் கல்லாங்குத்து பகுதியில், பதிவெண் இல்லை இல்லாத இருசக்கர வாகனத்தில் 2 மூட்டைகளுடன் ஒருவா் நின்று கொண்டிருந்தாா். அவா் அருகே ஏராளமான மூட்டைகள் அடுக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவரை பிடித்து விசாரித்ததில், அவா் காந்திச்சந்தை அருகேயுள்ள தாராநல்லூா் சூரன் தெரு பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் ( 35) என்பது தெரியவந்தது. மேலும் அவா் சிலருடன் சோ்ந்து, திருச்சி அரியமங்கலம் அம்மாக்குளம், காட்டூா், பாப்பாகுறிச்சி, திருவெறும்பூா், துவாக்குடி பகுதியில் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி, அவற்றை கால்நடை தீவனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதும், அதற்காக அரிசி மூட்டைகளை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அங்கு 26 அரிசி மூட்டைகளில் சுமாா் 1050 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, போலீஸாா் பிரபாகரனை செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா் வைத்திருந்த 26 அரிசி மூட்டைகள் மற்றும் அவா் பயன்படுத்திய இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

Similar News