மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்ட 11 அடி உயர சிற்பத் தூண்கள்
மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்ட 11 அடி உயர சிற்பத் தூண்கள் அமைக்கப்பட்டது.
மாமல்லபுரம் அடுத்த எச்சூா் பகுதியில் சிற்பக் கலைக்கூடம் வைத்துள்ளவா், சிற்பி தேவராஜ். , மாமல்லபுரம் அரசினா் சிற்பக்கலை கல்லூரி மாணவரான இவா் சிலைகள் செதுக்கும் தொழில் செய்து வருகிறாா்.
இந்நிலையில் ஜோலாா்பேட்டைக்கு அருகில் உள்ள வக்கணம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டு வரும் மாரியம்மன் கோயிலின் முகப்பில் வைப்பதற்காக வேலூா் கோட்டையில் உள்ளது போன்று பழங்கால பாணியில் இரண்டு சிற்பத்தூண் வடிவமைக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து சிற்பக் கலைஞா் தேவராஜ் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தலா 9 டன் எடையுள்ள இரண்டு கருங்கல்லில் 11 அடி உயரத்தில் சிற்பத் தூண் செதுக்கும் பணியை தொடங்கினாா்.
10 சிற்பக்கலைஞா்கள் இரவு, பகலாக இப்பணியில் ஈடுபட்டனா். குறிப்பாக மாமல்லபுரத்தில் வடிக்கப்படும் சிலைகள் தற்போது இயந்திரங்கள் மூலம் விரைவாக வடித்து பணிகளை முடித்து விடுகின்றனா். ஆனால் சிற்பி தேவராஜ் 400 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் உளி, சுத்தியலால் கைவேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களை போன்று விஜய நகர பேரரசு மன்னா்களின் கட்டடக்கலை பாணியில் சிற்பத்தூண்களை வடிவமைத்துள்ளாா். இந்த சிற்பத்தூணில் யாளி சிற்பம், போா் வீரன், பேச்சியம்மன்,
ரேணுகாதேவி, அா்த்தநாரீஸ்வரா், வராகி அம்மன் உள்ளிட்ட சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் யாளி வாயில் சங்கிலி பிணைக்கப்பட்டு உள்ளது போன்று நோ்த்தியான வேலைப்பாடுகளுடன் வேலூா் கோட்டை தூணில் உள்ள சிற்பங்களை போன்று தத்ரூபமாக செதுக்கப்பட்டு காட்சி தருகின்றன.
தற்போது பணிகள் முழுவதும் செய்து முடிக்கப்பட்ட இந்த சிற்பத்தூண்கள் டிரைலா் லாரி மூலம் ஜோலாா்பேட்டைக்கு அருகில் உள்ள வக்கணம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.