1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது
சிறுவாபுரியில், பராந்தக சோழன் காலத்தை சேர்ந்த 1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது;
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில், பராந்தக சோழன் காலத்தை சேர்ந்த 1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் கோவிந்த் அளித்த தகவலை அடுத்து, மதுரை வீரன், பூபதி, வடிவேல் ஆகியோர், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஒன்றியம், சிறுவாபுரி பகுதியில் களமேற்பரப்பு ஆய்வு செய்தனர். அப்போது, சிறுவாபுரி அருகிலுள்ள ஆமேதநல்லுார் கிராம நிர்வாக அலுவலகத்தின் வாசலில், மண்ணில் புதைந்த நிலையில், 5 அடி உயரம், 4 அடி அகலம் உள்ள பலகைக் கல்வெட்டு இருந்ததை அறிந்தனர். அதை சுத்தப்படுத்திய போது, பராந்தக சோழனின், 17வது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. பையூர் கோட்டத்துக்கு உட்பட்ட சிறுவரம்பேடு, கோகோநென்மலி உள்ளிட்ட பகுதிகள், ஆமேதநல்லுார் விஷ்ணுகிரகம் என்று அழைக்கப்பட்டதாகவும், அதை, ஆமேதநல்லுார் எனும் ஸ்ரீ சங்கரபாடி விஷ்ணுகிரகம் என்ற பெயராக, ஊர் சபையினர் கூடி மாற்றியதாகவும், கல்வெட்டில் தகவல் உள்ளது. இந்த பெயரை பாதுகாத்து வருபவர்களின் திருப்பாதங்கள், எங்கள் தலை மீது' என்று, கல்வெட்டு செய்தி முடிகிறது