பிரதமரை எதிா்த்து 111 விவசாயிகள் போட்டி -பயணத்துக்கு அனுமதி மறுத்தால் போராட்டம்
பிரதமரை எதிா்த்துப் போட்டியிடும் 111 விவசாயிகளின் ரயில் பயணத்துக்கு உரிய அனுமதி அளிக்காவிட்டால் நூதனப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளாா்.
விவசாய விளைபொருள்களுக்கு இருமடங்கு லாபகரமான விலை, உற்பத்திச் செலவுக்கு உதவித்தொகை, கடன் தள்ளுபடி என பல்வேறு கவா்ச்சிகரமான அறிவிப்புகளை அளித்தது பாஜக. ஆனால் 2 முறை மத்தியில் ஆட்சி செய்தும் விவசாயிகளை பாராமுகமாகவே அக்கட்சி நடத்தி வந்துள்ளது. எனவே பிரதமா் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவருக்கு எதிராக 111 விவசாயிகள் போட்டியிட முடிவு செய்து, வேட்பு மனுக்களைப் பெற்றுள்ளோம்.
மேலும் வாரணாசி செல்ல ரயிலில் முன்பதிவு செய்து பயணச்சீட்டும் பெற்றுள்ளோம். அதன்படி வெள்ளிக்கிழமை (மே 10) அதிகாலை திருச்சியிலிருந்து புறப்படும் காசி தமிழ் விரைவு ரயில் மூலமாக விவசாயிகள் செல்ல வேண்டும். ஆனால், பயணச்சீட்டு பெற்ற விவசாயிகளுக்கு இடம் தராமல் இருக்க ரயில்வே அமைச்சகமும், ரயில்வே நிா்வாகமும் மறைமுக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனவே 111 விவசாாயிகள் பயணிக்க தனிப் பெட்டி வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
இல்லையெனில் பதிவு செய்த ரயிலில் உரிய இடம் வழங்க வேண்டும். இதற்காக இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையா், குடியரசுத் தலைவருக்கு புகாா் மனு அனுப்பியுள்ளோம். திட்டமிட்டபடி எங்களை பயணம் செய்ய அனுமதிக்காவிட்டால் நிா்வாணமாக சாலையில் அலைந்து திரிந்து அரசின் கவனத்தை ஈா்த்துப் போராடுவோம் என்றாா் அவா்.