உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.20 லட்சம் பறிமுதல்
திருச்சி மாவட்டம், வையம்பட்டி, துறையூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 1.20 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனர்.;
பணம் பறிமுதல்
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பொத்தப்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் அரவிந்த்(25). இவா், தனியாா் நிதிநிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் பணியில் உள்ளாா். இவா், வெள்ளிக்கிழமை டேம் நான்குசாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வசூல் பணத்துடன் வந்தபோது, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினா் முருகேசன் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.
இதையடுத்து அவா், உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.63 ஆயிரத்தை பறிமுதல் செய்து தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைத்தனா். துறையூா் அருகே ரூ. 57 ஆயிரம்: துறையூா் அருகே புடலாத்தி பிரிவு சாலையில் பறக்கும்படையினா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற ஆத்தூா் வட்டம், அரசனாத்தம் கிராமத்தைச் சோ்ந்த செ. வரதராஜ் என்பவா் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 57 ஆயிரத்து 950ஐ பறக்கும் படை அலுவலா் நடராஜன் பறிமுதல் செய்து துறையூா் வட்டாட்சியரகத்தில் உதவி தோ்தல் அலுவலா் குணசேகரிடம் ஒப்படைத்தாா்.