11 ஆம் வகுப்பு பயிலும் 12,122 மாணவ, மாணவிகள் அரசின் விலையில்லா மிதிவண்டிகள் பெற்று பயன்
வேலூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் நிதியாண்டில் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் 12,122 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் பெற்று பயன்.
Update: 2024-02-25 15:59 GMT
வேலூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் நிதியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் 12,122 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன என வேலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை. 6 வயது முதல் 18 வயதுடைய அனைவருக்கும் இலவச, கட்டாய, தரமான மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை உள்ளடக்கிய முழுமையான கல்வியை வழங்குவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. அரசு பள்ளிகளில் தொடக்க மற்றும் உயர்நிலை கல்வியை முடித்த மாணவர்கள் மேல்நிலை வகுப்பு பயில ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு முதலில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து தரப்பு மாணவ மாணவிகளுக்கும் வழங்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும் பள்ளி வளாகத்திலேயே அமைந்துள்ள விடுதிகளில் தங்கி அதே பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும், உண்டு உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் நிதி ஆண்டில் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் 12,122 மாணவ மாணவிகளுக்கு ரூ. 5,84,55,040/-மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 5388 மாணவர்களுக்கும், 6734 மாணவிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான ஒரு மிதிவண்டியின் மதிப்பு ரூ. 4900/- மாணவிகளுக்கான ஒரு மிதிவண்டியின் மதிப்பு ரூ. 4760./- வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு வட்டாரத்தில் 1856 மாணவ மாணவிகளும், கணியம்பாடி வட்டாரத்தில் 777 மாணவ மாணவியர்களும், காட்பாடி வட்டாரத்தில் 2104 மாணவமாணவியர்களும், வேலூர் ஊரக பகுதிகளில் 1041 மாணவமாணவியர்களும், வேலூர் நகர்ப்புற பகுதியில் 2183 மாணவ மாணவியர்களும், கீ.வ குப்பம் வட்டார பகுதியில் 862 மாணவ மாணவியர்களும், குடியாத்தம் வட்டாரத்தில் 1979 மாணவ மாணவியர்களும், பேரணாம்பட்டு வட்டாரத்தில் 1320 மாணவ மாணவியர்களும் என மொத்தம் 12,122 மாணவ மாணவியர்கள் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.