16 பள்ளி வாகனங்களின் உரிமம் நிராகரிப்பு !!
ஆய்வில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்ட 16 வாகனங்களின் உரிமம் நிராகரிக்கப்பட்டது.
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியரை ஏற்றிச் செல்லும் வேன், பேருந்து உள்ளிட்ட பள்ளி வாகனங்களின் தரம் குறித்து, ஆய்வு செய்ய தமிழக அரசு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் பள்ளி வாகனங்கள், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வடமங்கலத்தில் உள்ள தனியார் கல்லுாரி வளாகத்தில் நேற்று ஆய்வு செய்யப்பட்டன.
ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன் தலைமையில், ஸ்ரீபெரும்புதுார் ஏ.எஸ்.பி., உதயகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் குமரா முன்னிலையில், 199 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில், வாகனங்களில் உள்ள இருக்கை, அவசர உதவி கதவு, முதலுதவி பெட்டி, வேகக் கட்டுபாட்டு கருவி, தீயணைப்பு கருவிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்ட 16 வாகனங்களின் உரிமம் நிராகரிக்கப்பட்டது.
ஆய்வில், முதன்மை கல்வி அலுவலர் ஜெய்சங்கள், ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் சுந்தரமூர்த்தி, ஸ்ரீபெரும்புதுார் மோட்டார் வாகன ஆய்வாளர் கிருஷ்ணன் பங்கேற்று ஆய்வு செய்தனர்.