ஏப்ரல் 19ம் தேதி அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் விடுமுறை!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் வணிகர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.
மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறும் தினமான 19/04/2024 அன்று தனியார் நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என சென்னை தொழிலாளர் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் வணிகர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வருகிற ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிற நாளில் வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.
தேர்தல் நாளான ஏப்ரல் 19 அன்று தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளதை வணிக நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும் எனவும், நிறுவனங்களில் வேலை பார்க்கும் அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் எனவும், இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
அவ்வாறு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்காத தனியார் நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், மொபைல் அசோசியேசன் மாவட்ட தலைவர் ராயல் பத்மநாபன், நகர தலைவர் ரிஸ்வான், செயலாளர் எவரெஸ்ட் ராஜா மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், மேலாளர்கள் கலந்துகொண்டனர்.